Published : 13 Apr 2022 08:12 PM
Last Updated : 13 Apr 2022 08:12 PM

தலா ரூ.40 கோடியில் வெங்காய சாகுபடி இயக்கம், நெல் தரிசில் பயறு சாகுபடி திட்டம்: தமிழக வேளாண் துறையின் 15 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ஆண்டு முழுவதும் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையில் 40 கோடி ரூபாய் செலவில் வெங்காய சாகுபடி இயக்கம் அமைத்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் நடந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைத்தல், தருமபுரி மாவட்டத்தில் 'மா' மகத்துவ மையமும், திருநெல்வேலி மாவட்டத்தில் 'நெல்லி' மகத்துவ மையமும் ரூ.6 கோடி செலவில் அமைத்தல், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் ரூ. 3.75 கோடி செலவில் பலா மதிப்பு கூட்டும் மையம் அமைத்தல், ரூ.4 கோடியே 20 லட்சம் செலவில் முந்திரி மேம்பாட்டு இயக்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதில் இடம்பெற்ற 15 முக்கிய அறிவிப்புகள்:

> விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திடவும், 2022-2023-ம் ஆண்டில் நெல் தரிசில் பயறு சாகுபடி திட்டம் பத்து லட்சம் ஏக்கரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> செங்கல்ராயன், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளுக்கு அரவை இயந்திர பகுதிக்கு தேவையான கியர் பாக்ஸ்கள் (Planetary Gear Box) ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

> வேலூர், அறிஞர் அண்ணா, தருமபுரி சர்க்கரை ஆலைகளின் அரவை இயந்திர மின்மோட்டாரை கட்டுப்படுத்தும் கருவிகளும், செங்கல்ராயன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு, பல்சக்கரத்துடன் கூடிய அழுத்த உருளையின் (Toothed Roller Pressure Feeder) மின்மோட்டாரை கட்டுப்படுத்தும் கருவியும் 2022-2023-ம் ஆண்டில் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

> கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி- 2, செங்கல்ராயன், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளுக்கு புதிய உருளை கொள்முதல் செய்யவும், கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2, எம்.ஆர்.கே, செங்கல்ராயன், தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவைப் பகுதியினை தானியங்கி மயமாக்கவும் 2022-2023-ம் ஆண்டில் 3 கோடியே 81 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

> 2022-2023 -ம் ஆண்டில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கொதிகலன் நீரேற்றும் பம்பும், தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நிலைய மின்மோட்டாரும் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

> 2022-2023 -ம் ஆண்டில் அறிஞர் அண்ணா , பெரம்பலூர், கள்ளக்குறிச்சி-1 சர்க்கரை ஆலைகளில் வளி அழுத்த முறையில் இயங்கும் பேன் (Pan) திறப்பு தடுக்கிதழ் (Valve) 92 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

> கரும்பு, தானியத்திலிருந்து எத்தனால் தயாரிப்பினை ஊக்கப்படுத்தி, எத்தனால் ஆலை தொடர்ச்சியாக இயங்கும் வகையில், நாளொன்றுக்கு 80 ஆயிரம் லிட்டர் திறனுடன் எத்தனால் ஆலையினை பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 10 லட்சம் ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

> மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய 2022-2023 ஆம் ஆண்டில் குழு அமைக்கப்படும்.

> 2022-2023 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் 'மா' மகத்துவ மையமும், திருநெல்வேலி மாவட்டத்தில் 'நெல்லி' மகத்துவ மையமும் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

> தமிழகத்தில் முந்திரி சாகுபடியினை அதிகரித்திட, 2022-2023-ம் ஆண்டில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் முந்திரி மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.

> தமிழகத்தில் வெங்காய சாகுபடிப் பரப்பினை உயர்த்தியும், வெங்காய சேமிப்பு அமைப்புகளை உருவாக்கியும், பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையில், 2022-2023 -ம் ஆண்டில் வெங்காய சாகுபடி இயக்கம் 40 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

> கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் 2022-2023 -ம் ஆண்டில் பலா மதிப்பு கூட்டும் மையம் ரூ. 3.75 கோடி செலவில் அமைக்கப்படும்.

> வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை சிறு தானியம், பயறு வகைப் பயிர்களையும் அறுவடை செய்வதற்கு ஏதுவாக 2022-2023-ம் ஆண்டில் 18 லட்சம் ரூபாய் செலவில் 25 சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மாற்றி வடிவமைக்கப்படும்.

> வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்களின் பயன்பாட்டினை கண்காணிக்க, 2022-2023 ஆம் ஆண்டில் புவியியல் தகவல் நிலை அறியும் ஜிபிஎஸ் கருவிகள் 44 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்படும்.

> நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 2022-2023-ம் ஆண்டில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, செயல்விளக்கங்கள், பயிற்சிகள் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x