Published : 13 Apr 2022 06:29 PM
Last Updated : 13 Apr 2022 06:29 PM
ராமேஸ்வரம்: ஒரு பொருளின் நேர் உச்சிக்கு சூரியன் வருவதால் உருவாகும் 'நிழல் இல்லாத நாள்' என்ற வானியல் அபூர்வ நிகழ்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை தென்பட்டது.
வருடத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் சூரியன் நம் தலைக்கு மேலே இருக்கும்போது நமது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் காலடியில் இருக்கும். அதாவது, சூரியன் ஒரு பொருளின் மேல் செங்குத்தாக வரும் போது, அப்பொருளின் நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (zero shadow) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும் போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்றும் கூறுவர்.
இந்த வானியல் அபூர்வ நிகழ்வு அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் தென்படுவதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். இது சூரியனின் வடநகர்வு மற்றும் தென்நகர்வைப் பொறுத்து ஆண்டுக்கு 2 முறை வரும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான 1-வது 'நிழல் இல்லாத நாள்' ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை தென்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'நிழல் இல்லாத நாள்' குறித்த நேரடி விளக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை பள்ளித்தலைமை ஆசிரியர் சிந்து தொடங்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் செந்தில் வடிவேலன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க துணை செயலாளர், ஆசிரியர் இணைந்து மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் ஆய்வு மேற்கொள்ளுவது பற்றி விளக்கம் அளித்தனர். மதியம் 12.14 மணிக்கு சூரியன் நேர் உச்சிக்கு வந்த போது நிழல் இல்லாத காட்சி தென்பட்டது.
விஞ்ஞானி பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் டெக்னாலஜி மையம் மற்றும் மதுரை கலிலியோ அறிவியல் மையம் வழங்கிய பயிற்சி உபகரணங்களைக் கொண்டு நிழல் இல்லா நாள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் உருண்டையான தண்ணீர் பாட்டில், பவுடர் டப்பா, கிரிக்கெட் ஸ்டெம்ப் உள்ளிட்ட பொருட்களை பொருள்களக் கொண்டு நிழல் பூஜ்ஜியம் சோதனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க துணை செயலாளர் ஆசிரியர் ஜெரோம் கூறியதாவது, ''சூரியனின் கதிர்கள் புவியின் பூமத்திய ரேகையின் மீது சரியாக விழுவதால் 'பூஜ்ஜிய நிழல் நாள்' ஏற்படுகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். தொடர்ந்து வியாழக்கிழமை விருதுநகர் மாவட்டத்திலும், வெள்ளிக்கிழமை சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்களிலும் 'நிழல் இல்லாத நாள்' நிகழ்வு நடக்கும். இந்த நிகழ்வு ஏப்ரல் 24 அன்று சென்னையில் நிறைவு பெறும்.
இந்த நிகழ்வு பற்றித் தெரிந்து கொள்ள 'பூஜ்ஜிய நிழல் நாள்' (Zero Shadow Day-ZSD) என்ற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதிலுள்ள தேடல் வசதி (ZSD Finder) மூலம் இந்திய வரைபடத்தில் உங்கள் ஊர் அமைந்துள்ள இடத்தை குறிப்பிட்டால் அங்கு 'நிழல் இல்லாத நாள்' எந்த தேதிகளில் ஏற்படும் என்பதை அறியலாம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...