Published : 13 Apr 2022 03:57 PM
Last Updated : 13 Apr 2022 03:57 PM

விளை நிலங்களில் ஏரிவாயு குழாய் பதிக்கும் பணியை முற்றிலும் தடுத்து நிறுத்தவும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: தமிழக அரசு எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முற்றிலும் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அச்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடினர். இதன் விளைவாக, தமிழக அரசு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி விளைநிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது என்றும் மாற்றுவழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

விளைநிலங்களில் போடப்பட்டிருந்த குழாய்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கெயில் நிர்வாகம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அடாவடித்தனமாக குழாய் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், கரியப்பனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி கணேசன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான 64 சென்ட் நிலத்தில் இன்று குழாய் பதிக்க அதிகாரிகள் வலுகட்டாயமாக முற்பட்ட போது பொதுமக்களும் சேர்ந்து போராடியுள்ளனர்.

சிறிது நேரத்தில் அருகிலிருந்த தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விவசாயி கணேசன். விவசாயி கணேசனின் மரணத்திற்கு கெயில் நிர்வாகம் தான் பொருப்பேற்க வேண்டும். தமிழக அரசு, இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முற்றிலும் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். மாண்டு போன விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் கெயில் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்.

அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். விவசாயிகளின் விருப்பத்துக்கு விரோதமாக விளை நிலங்களில் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான பிரச்சனையில் முதல்வர் தமிழக அரசின் நிலையை விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது." என்று சண்முகம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x