Published : 13 Apr 2022 10:44 AM
Last Updated : 13 Apr 2022 10:44 AM
சென்னை: சித்திரை மாதம் முதல் நாளான நாளை தமிழர் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சித் சட்டப்பேரவைத் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற எங்கள் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய ``தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி" என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கிறார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்! "
சித்திரையே வா! நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா!" என்று உளம் மகிழ அனைவரும் வரவேற்கும் இப்புத்தாண்டில், அனைத்து வளமும் பெருகும் வகையில் நம் தாய்த் தமிழ் நாட்டினை மேலும் உயர்த்திட இத்திருநாளில் உறுதி ஏற்போம். இந்த இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அன்பு மேலோங்கி அமை நிலவட்டும் என மனதார வாழ்த்தி, உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், மீண்டும் ஒருமுறை எங்களது நெஞ்சார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்." என்று இருவரும் கூட்டாக வாழ்த்துகளை கூறியிருந்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து,
சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர். இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது."சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்" என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.
வெப்பம் மிகுந்துள்ள இக்காலத்தில், குளிர்ந்த நீரையும், பழங்களையும் வழங்கி கோடையின் தகிப்பைப் போக்குதல் தமிழர்களின் வழக்கமாகும். தமிழர்களின் பொற்காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஆருயிர்ச் சகோதரர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் புது யுகமாக இந்தக் காலம் அமைந்துவிட்டது.
துன்ப இருளில் கலங்கித் தவிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு விடியலைக் காணவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தை மலரச் செய்யவும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் தன்மான உணர்வுடன் உரிமைச் சங்கநாதம் எழுப்புகின்றனர். ஏப்ரல் 14ம் நாள்தான் இந்திய அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள். ஆதலால், அப்பெருமகனார் கனவுகண்ட சமூக நீதி மலர உறுதிகொள்வோம்.
ஒளி மயமான எதிர்காலம் தமிழ் குலத்துக்குக் கட்டியம் கூறும் இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், தமிழக மீனவர்களின் அல்லல்களை அகற்றவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும் இச்சித்திரைத் தலைநாளில் சூளுரை மேற்கொள்வோம்." இவ்வாறு வைகோ கூறியிருந்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு கனிவான "சுபகிருது" தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகிலேயே தொன்மையான இலக்கிய, இலக்கண வளங்கள் நிறைந்த தமிழைப் பேசும் மூத்த குடிமக்களுக்கு, சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும் புத்தாண்டு எல்லா வளங்களையும் நலன்களையும் தந்து அருளட்டும்.
இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த கரோனா பேரிடர் ஓய்ந்து, சித்திரையில் தெய்வீக மணம் பரப்பும் நிகழ்ச்சிகளும், திருவிழாக்களுமாக தமிழரின் பாராம்பரிய கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. "எவ்வளவு பெரிய இன்னல்களையும் இறையருளின் துணையும், இதயம் சோர்ந்து போகாத நம்பிக்கையும் இருந்தால் கடந்துவிட முடியும்" என்று கரோனா காலம் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது.
எனவே, புத்தாண்டில் வலிகள் மறையட்டும்; வஞ்சனைகள் ஓயட்டும். நல்லோர் எண்ணங்கள் நடந்தேறட்டும்;தீமைகள் அகலட்டும். ஆரோக்கியத்திலும், பொருளாதாரத்திலும் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அனைவரும் முழுமையாக வெளியில் வரட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறையட்டும் என பிராத்திக்கிறேன். "சுபகிருது" புத்தாண்டு, எல்லா சுபங்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன்." என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து அறிக்கையில்: "தமிழர்கள் வாழ்வில் வெற்றிகளை நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.
சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சித்திரைத் திருநாளை பொதுமக்கள் ஒன்று கூடி உற்சாகத்துடன் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இப்போது கரோனா விலகி விட்டதால் தமிழர்கள் வாழ்வில் இனி கொண்டாட்டங்களும், மகிழ்ச்சியும் நிறையும் என்பதில் ஐயமில்லை.
சூரிய கிரகணத்தையும், சந்திர கிரகணத்தையும் போன்றே, சில சதிகளால் சமூகநீதி கிரகணமும் அவ்வப்போது ஏற்படுகிறது. கிரகணம் என்பதே தேவையற்ற மறைப்பு தானே... தற்காலிக மறைப்பு தானே. அதுவும் விரைவில் விலகும். அதன் பின்னர் தமிழர் வாழ்வில் சமூகநீதியும், அதனால் கிடைக்கும் சமத்துவமும் செழிக்கும்.
அதைப்போலவே, உலகுக்கு உணவு படைக்கும் உழவர்களை மகிழ்விக்கும் வகையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது; நீர் நிலைகளும் நிரம்பியிருப்பதால் உழவும் சிறக்கும். இவை மட்டுமின்றி, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலமும், வளமும் கிடைக்க வேண்டும். அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில்: "மாம்பழப் பருவத்தின் வருகையை உணர்த்தும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே
இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, சித்திரையும் சிறப்பானது தான். சித்திரையில் தொடங்கப்படும் எந்தப் பணியும் வெற்றிகரமாக அமையும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உண்மையாக வேண்டும். தமிழர்கள் இனி தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்;
அவர்களின் வாழ்வில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை பொங்குவதற்கு வாழ்த்துகிறேன்." என்று அன்புமணி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT