Published : 13 Apr 2022 05:24 AM
Last Updated : 13 Apr 2022 05:24 AM

மீனவர்களின் ஜாமீனுக்கு ரூ.1 கோடி கேட்பதா? - இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: மீனவர்களை ஜாமீனில் விட தலா ரூ.1 கோடி கேட்கும் இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய இடத்தில் உள்ள நீதிமன்றங்களே, அநீதியான தீர்ப்பை வழங்கும் நடைமுறை இலங்கையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை மார்ச் 23-ம் தேதி சிறைபிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு, இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்து வெளியில் வர வேண்டுமெனில், ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி செலுத்தி ஜாமீனில் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது நீதிக்குப் புறம்பான செயலாகும்.

மீனவர்களுக்கு மிகப்பெரிய அநீதி

தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ள இலங்கை நீதிமன்றத்துக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். மீன்பிடித் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டுதான் மீனவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள்.

மேலும், இலங்கைக் கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலுக்கும்,தாக்குதலுக்கும், சிறைபிடித்தலுக்கும் இடையே மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது வறுமைதான் இதற்குக் காரணம். இப்படிப்பட்ட மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் ரூ.1 கோடி கேட்பது, அநியாயத்தின் உச்சக்கட்டம். இந்த அளவுக்குப் பணம் செலுத்தும் சக்தி இருந்தால், மீன்பிடித் தொழிலையே அவர்கள் மேற்கொள்ளமாட்டார்கள்.

இலங்கையில் நிதி நெருக்கடி

இலங்கையில் உள்ள தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்து இருக்கலாம். நிதி நெருக்கடியைச் சரிசெய்யத் தேவையான நிதியுதவியைப் பிற நாடுகளிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும். அதைவிடுத்து, இலங்கைக்கு பல உதவிகளைச் செய்துவரும் நட்பு நாடான இந்தியாவின் மீனவர்களைத் துன்புறுத்துவது செய்நன்றி மறத்தலாகும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x