Published : 20 Apr 2016 02:32 PM
Last Updated : 20 Apr 2016 02:32 PM
அதிமுக தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற மேலூர் தொகுதியில் இந்த முறை அக்கட்சிக்கு திமுக, தமாகா கட்சிகள் கடும் போட்டியைக் கொடுத்து வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன தொகுதி மேலூர். எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். 1951 முதல் இதுவரை 14 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 4 முறையும், தமாகா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 1980 முதல் தொடர்ந்து 5 சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ், தமாகா வெற்றி பெற்றததால் காங்கிரஸ் பாரம்பரியம் மிக்கதாக இந்த தொகுதி கருதப்பட்டது. அதன்பின் இந்த தொகுதியில் தொடர்ந்து 2001, 2006, 2011 ஆண்டு நடந்த பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்று அதிமுக கோட்டையாக இருக்கிறது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஆர்.சாமிக்கு இந்த முறை அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பஞ்சாயத்துத் தலைவராக இருந்த பெரியபுள்ளான் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு சீட் கொடுத்த அதிர்ச்சியில் இருந்தே ஆர்.சாமி இன்னும் மீளவில்லை. அதனால், கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாமல் பெரிய புள்ளான் திண்டாடி வருகிறார்.
திமுக சார்பில் கிழக்கு ஒன்றியச் செயலர் ரகுபதி போட்டியிடுகிறார். இவருக்கு இப்பகுதியில் ஓரளவு சொந்த செல்வாக்கும், கட்சியினர் ஒத்துழைப்பும் இருப்பதால் இந்த தொகுதியில் அதிமுகவுக்கு திமுக சரியான போட்டியை கொடுத்து வருகிறது.
இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்துள்ளதால் திமு கவினர் நம்பிக்கையுடன் உள் ளனர். 1996 பேரவைத் தேர்தலில் இந்த தொகுதியில் தமாகா வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பாராம்பரிய தொகுதி என்பதால் தமாகா, மக்கள் நலக்கூட்டணியில் கேட்டு வாங்கியுள்ளது.
இக்கட்சி சார்பில் பரத் நாச்சியப்பன் போட்டியிடுகிறார். இளைஞரான இவர், மாணவர் பருவத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜக சார்பில் கக்கன் சகோதரர் பேரன் பூபதி, பாமக சார்பில் அப்துல் சலாம் போட்டியிடுகிறார்கள்.
இந்த தொகுதியைப் பொருத்தவரையில் திமுக, அதிமுக இடையேதான் போட்டி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் இந்த வெற்றியை தக்கவைக்க அக்கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.. பாஜக வேட்பாளர் பூபதி, தாத்தா கக்கனின் எளிமையை முன்னிறுத்தி அதுபோல் மக்கள் சேவை செய்ய ஒரு வாய்ப்பு தருமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இங்குள்ள நூற்றுக்கணக்கான குவாரிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வட மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மதுரை மாவட்டத்திலேயே அதிக மலை பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. பெரியாறு, வைகை தண்ணீர் மூலம் இப்பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலூர் ஒன்றியம், மேலூர் நகராட்சி, கொட்டாம்பட்டி ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூராட்சி ஆகியன இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள், குவாரி கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
கடைமடை பாசன பகுதிவரை தண்ணீர் கொண்டு செல்வது, தடை செய்யப்பட்ட கிரானைட் தொழிலை நெறிப்படுத்தி மீண்டும் முறையாக நடத்தி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, கூட்டுறவு நூற்பாலை திறப்பது உள்ளிட்ட பிரதான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT