Published : 04 Apr 2016 08:09 AM
Last Updated : 04 Apr 2016 08:09 AM
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான, மதிமுக பொதுச் செயலர் வைகோ தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளார். கூட்டணியில் சேர தேமுதிகவுடன் திமுகவும் பாஜகவும் பேரம் பேசியதாக வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இது தொடர்பான கேள்வியின்போது தொலைக்காட்சி நேர்காணலில் பாதியில் எழுந்து சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் வைகோவின் செய்தியாளர் சந்திப்புகளில் சர்ச்சைகள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் நிருபர்களிடம் பேசவே பயமாக இருப்பதாக வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில், மதுரையில் வைகோ நேற்று காலை ‘பிரேக்பாஸ்ட் பிரஸ்மீட்’ நிகழ்ச்சியை நடத்தினார். இதில் வழக்கம்போல வரலாற்று நிகழ்வுகளை அடுக்கினார். பிரபாகரன், பகத்சிங், கட்டபொம்மன் வாழ்ந்த இடங்களின் மண்ணைச் சேகரித்து கலிங்கப்பட்டி வீட்டில் பாதுகாத்து வருவதாக பெருமிதம் கொண்டார். சிலர் அரசியலுக்காக பசும்பொன்னுக்கும், பரமக்குடிக்கும் செல்வதுபோல இல்லாமல், தலைவர்களின் வீரத்தைப் பாராட்டும் விதமாக அவர்களின் நினைவிடத்துக்கு தான் நேரில் சென்று மரியாதை செலுத்துவதாகக் கூறினார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ‘கோபப்படாமல் ஆரோக்கி யமாக பதில் அளித்திருக்கலாமே’ எனக் கேட்டபோது வைகோ கோபமடைந்து, அடுத்த நொடியில் சகஜமானார். பின்னர், தனக்கு எதிராக பத்திரிகையாளர்கள் தூண்டப்படுகிறார்கள். அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் எனத் தெரியும். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. என்னிடம், எந்தக் கேள்வி வேணுமானாலும் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். மீண்டும் அதுபோன்ற ஒரு சர்ச்சை வரக்கூடாது என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ‘விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சந்தித்தபோது, நான் அங்கிருந்து அவசரமாக வெளியே சென்றேன். உடனே மறுநாள், தொகுதி உடன்பாட்டில் சிக்கல், சாப்பிடாமல் வெளியேறினார் வைகோ என செய்தி வெளியானது. அந்த செய்தி, என்னை மிகவும் பாதித்தது. அது உண்மையல்ல. எனது மகன் பிறந்தநாளை ஒட்டி குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக அவசரமாக வீட்டுக்குப் புறப்பட்டதை திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்’ என வேதனை தெரிவித்தார்.
இந்தப் பேட்டியில் திமுக, அதிமுக, பாஜகவை வைகோ கடுமையாக சாடினார். தமிழகம் ஊழலில் முதலிடத்தில் உள்ளது. ஜெயலலிதா குறித்து நான் சொன்னதை, எப்போதும் மாற்றிப் பேசமாட்டேன். சொன்னதை மாற்றிப் பேசும் பழக்கம் எனது 50 ஆண்டு அரசியல் வாழ்வில் கிடையாது என்றார். இறுதியாக ‘வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம். ரூ.1000 வாங்கினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாழ்வு அழிந்துவிடும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்களுக்கு தட்டு எடுத்துக் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அப்போது, ‘சிறையில் இருந்தபோது அனைத்து கைதிகளும் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடுவேன்’ என பழைய நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவருடன் நிருபர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT