Published : 12 Apr 2022 10:33 PM
Last Updated : 12 Apr 2022 10:33 PM
"எந்தக் காரணத்திற்காகவும் இந்தி மொழியைத் திணிப்பதை தமிழக பாஜக அனுமதிக்காது, ஏற்றுக்கொள்ளாது என்பதை மிக தீர்க்கமாக சொல்வது எங்களது கடமை” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது: "மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், இது என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டது என்பதால், மாணவர்களுக்கு இது எதிராக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 2019-20 இல், தமிழகத்தின் பாடக் கல்வித்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து, என்சிஇஆர்டி பாடத்திட்டத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான் நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் பெரிய அளவு சாதனை செய்துள்ளனர். அதேபோல் பயிற்சி மையத்துக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.
நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையின்படி 99 சதவீத மாணவர்கள் பயிற்சி மையத்தின் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறியிருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் தேர்ச்சிப் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைப் பெற்ற மாணவர்களில் 59 சதவீதம் பேர் எந்தவிதமான பயிற்சி மையங்களுக்கு சென்று நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை என்று சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் கூறியிருப்பதாக, செய்திகள் வெளிவந்துள்ளது. அப்படியிருக்கும்போது, நேற்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போது எப்படி மத்திய அரசை ஒருதலைபட்சமாக குறை சொல்லலாம்.
2010-ல் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இதே தேர்வு, தற்போது இந்தியா முழுவதுமே கொண்டு செல்வதற்காக திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக துணை வேந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்துள்ளது. 2010-ல் ஒரு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையும் பெற்றுள்ளனர். எனவே, இந்த தீர்மானம் கொண்டு வரும்போது கல்வித்துறை அமைச்சர் தெளிவான முறையில் விளக்கினாரா என்ற கேள்வி இருக்கிறது.
மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு மூலம் 13 பிராந்திய மொழிகளில் இந்த தேர்வை எழுதி மாணவர்கள் இந்தியா முழுவதும் சென்று படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மற்ற சுயநிதி கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் இத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எம்பிஏ கல்லூரிகளில் சேர ஐஐஎம் நடத்துகின்ற பொதுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இதுவரை சேர்க்கை நடபெற்று வருகிறது. எனவே CUET தேர்வை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தேவையெனில் நடத்தலாம், இல்லையெனில் விட்டுவிடலாம். ஆனால் முற்றிலும் முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைத்துவிட்டு, இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கவனத்தை அரசு திசை திருப்பியிருக்கிறது. இதனை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியாவில் 185 கோடியே 74 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 2 கோடியே 22 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போலியோவைக் கட்டுப்படுத்த 23 வருடங்கள் தேவைப்பட்டது. டெட்டனஸைக் கட்டுப்படுத்த 54 வருடங்கள் தேவைப்பட்டது. சிக்கன் பாக்ஸை கட்டுப்படுத்த 30 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் சரித்திர சாதனையாக 185 கோடியை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று மாலை வரை செலுத்தப்பட்டுள்ளது. 5 கோடியே 40 லட்சம் பேர் முதல் தவணையும், 4 கோடியே 37 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 15 வயது முதல் 18 வயது வரை மாணவர்கள் 23 லட்சத்து 62 ஆயிரம் பேர் உள்பட தமிழகத்தில் 10 கோடி பேருக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கியுள்ளது.
இந்தி பிரச்சினை தொடர்பாக ஆங்காங்கே பல கருத்துகளை நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து பேசியதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தனர். அதே போல, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பல கருத்துகள் இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெளிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகக்கூட இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. தமிழக பாஜகவை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் மிக மிக தெளிவாக இருக்கின்றோம். எந்தக் காரணத்திற்காகவும் இந்தி மொழியை திணிப்பதை தமிழக பாஜக அனுமதிக்காது, ஏற்றுக்கொள்ளாது என்பதை மிக தீர்க்கமாக சொல்வது எங்களது கடமை.
காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரை 1965 காலகட்டத்தில் இருந்து பார்த்துகொண்டிருக்கிறோம். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளைத் தாண்டி தமிழகம் வந்திருக்கிறது. குறிப்பாக 1965-ல் காங்கிரஸ் கட்சி இந்தியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். 1986-ல் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையில் மறுபடியும் அதை திணித்தார்கள். இதையெல்லாம் உடைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்தி மொழியை திணிக்காத ஒரு நிலையை உண்டாக்கியிருக்கிறார்.
அதாவது காங்கிரஸ் கட்சி இதை வைத்து அரசியல் செய்து 40-50 ஆண்டு காலமாக ஒரு பிம்பத்தை கட்டமைத்திருந்தார்கள். பாஜக கொண்டுவந்துள்ள தேசிய புதிய கல்விக் கொள்கையின் வரைவில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், அதை பிரதமர் மோடி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தி விருப்ப மொழியாகத் தான் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. எனவே விரும்பிய பிராந்திய மொழிகளைப் படித்துக்கொள்ளலாம் என்று மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011- காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, திமுக அதன் கூட்டணியில் இருந்தபோது, உளதுறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்துப் பொருள்கள் நாம் சந்தையில் வாங்கும்போது அதில் கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் இருக்க வேண்டும் கூறப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் திமுக அவர்களுடன் கூட்டணியில் அங்கமாக இருந்தது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் அமைச்சர்களாக இருந்தார்கள்.
உள்துறை அமித் ஷா இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்து வருகிறது, இதற்கு பதிலாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை எதிர்த்து பல குற்றச்சாட்டுகள், விவாதங்கள் சென்றுகொண்டிருக்கிறது. பாஜகவுக்கு உச்சகட்ட பெருமை என்னவென்றால், இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருப்பது உச்சகட்ட பெருமை. இதில் எந்தவொரு மாற்றுக்கருத்துமே இல்லை. உதாரணமாக, ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன கருத்து. இந்தியாவினுடைய இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரர். நிச்சயமாக அதை வரவேற்கின்றோம். அதில் தவறு எதுவும் கிடையாது. இணைப்பு மொழியாக்க போட்டிபோட்டு அந்த இடத்தை அடைவதற்கான முயற்சியை நாம் எடுத்திருக்கிறோமா, என்ற கேள்வியைத் தான் நாம் கேட்கிறோம்.
நீதிபதி ஏ.கே.ராஜன் கொடுத்த அதே கமிட்டி அறிக்கையில், 2020-ல் 12-ம் வகுப்பில் 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் தமிழிலும், 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆங்கிலத்திலும் தேர்வு எழுதுகின்றனர். இதே 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2010-ல் 12 வகுப்பு தேர்வெழுதியவர்கள் 6 லட்சத்து 15 ஆயிரம் பேர் இதில் தமிழில் எழுதியவர்கள் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர். எனவே பத்தாண்டுகளில் தமிழில் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரமாக குறைந்துள்ளது. 2010-ல் 68 சதவீத மாணவர்கள் தாய்மொழி தமிழில் தேர்வெழுதினர். தற்போது இது 51 சதவீதமாக குறைந்துள்ளது.
எனவே, பாஜகவின் கோரிக்கை உண்மையாக தமிழ் ஒரு இணைப்பு மொழியாக வரவேண்டும் என முயற்சித்தால், தமிழக அரசு ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதி, அந்தந்த மாநிலத்தில் 10 பள்ளிகளில் முழுமையாக தமிழ்வழிக் கற்றலை நடத்தவும், அதற்கான முழு செலவுத் தொகையினையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக முதல்வர் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. தேசியக் கல்விக் கொள்கையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தாயமொழியில் படிக்கவேண்டும் என்ற உத்தரவைக் கொண்டு வந்ததே பாஜக அரசுதான்.
எனவே, எந்த காரணத்திற்காகவும் இந்தியை திணிப்பதை தமிழக பாஜக எதிர்க்கும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் எங்களுக்கும் இல்லை. இந்தியா விஷ்வகுருவாக வரவேண்டும் என்றால், தமிழகம் இந்தியாவின் விஷ்வகுருவாக வரவேண்டும். அப்போதுதான் இந்தியா உலகின் விஷ்வகுருவாக மாறும். எனவே இங்கிருக்கிற யாருமே இந்தி பேசமாட்டோம்” என்றார் அண்ணாமலை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT