Published : 05 Apr 2016 04:01 PM
Last Updated : 05 Apr 2016 04:01 PM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 அல்லது 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது.
திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அடுத்தகட்டமாக அறிவிக் கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகமுள்ள தென்மாவட்டங்களில் அக்கட்சி அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது.
7 தொகுதிகள்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குறைந்தது 7 தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, ஆலங்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் ீவைகுண்டம், விளாத்திகுளம் தொகுதிகளில் நிச்சயம் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங் குளம், வாசுதேவநல்லூர் தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஆலங்குளம் தொகுதியில் 1952, 1962, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.
ராதாபுரத்தில் போராட்டம்
ஏற்கெனவே ராதாபுரம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கேட்டு அக் கட்சியினர் கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். காரணம், இத் தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், காந்திகாமராஜ் தேசிய காங்கிரஸ் ஒருமுறையும், தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் இத் தொகுதியை காங்கிரஸுக்கு, திமுக விட்டுத்தரும் வாய்ப்புகள் குறைவு என்று அக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
வாசுதேநல்லூர்
இத்தொகுதியில் 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ஈஸ்வரன் வெற்றி பெற்றிருந்தார். அடுத்து 1996, 2001 தேர்தல்களில் தமாகா சார்பில் அவரே போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இதனால் இத் தொகுதியிலும் காங்கிரஸுக்கு நிலைத்த செல்வாக்கு இருப்பதை கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
நாங்குநேரி
திருநெல்வேலி மாவட்டத்தில் நிச்சயமாக நாங்குநேரி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும். காரணம் இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கென்று செல்வாக்கு இருந்து வருகிறது. இத் தொகுதியில் 1952 முதல் 1967 வரை நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல்களிலும், 2006 தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.
அணிகள் மோதல்
நாங்குநேரி தொகுதிக்கு ஏற்கெனவே இத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த வசந்தகுமார் வாய்ப்பு கேட்டுள்ளார். அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் இத் தொகுதிக்கு அவர் வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார். இதுபோல் இத் தொகுதியில் போட்டியிட சிதம்பரம் அணியும் முட்டிமோதுகிறது. இந்த அணியிலுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிரம்மநாயகம், வானுமாமலை ஆகியோர் இத் தொகுதிக்கு குறிவைத்திருக்கிறார்கள். இதுபோல் முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனும் தனது ஆதரவாளருக்கு இத் தொகுதியை ஒதுக்க மாநில தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுபோல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் இத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT