Published : 12 Apr 2022 03:55 PM
Last Updated : 12 Apr 2022 03:55 PM
சென்னை: "ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். நம்முடைய மொழியைச் சார்ந்தவர்கள், நம்முடைய மொழியை தாங்கிப் பிடிக்க நினைப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதலோ, அந்த நபர்களின் கருத்துரிமையை எதிர்த்து குரல் கொடுப்பதோ, பாஜகவின் நோக்கம் கிடையாது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "எனக்கு இந்தி தெரியாது, நான் இந்தி பேசமாட்டேன். ஆனால் தேவையென்றால் இந்தியை கற்றுக்கொள்வேன். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. உங்களுடைய வேலைக்குத் தேவை, படிப்புக்குத் தேவை, தொழிலுக்கு தேவை என்றால் தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் கட்டாயமாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டுதான், நாம் இந்தியர் எனக் காட்டிக்கொள்ள வேண்டிய நிலைமை யாருக்கும் கிடையாது. இதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் விரும்பவில்லை. இதுதொடர்பாக மிக தெளிவாக தேசியக் கல்விக் கொள்கையில் பேசப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். பாஜகவைப் பொருத்தவரை ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றோம். எந்த விஷயத்திற்காகவும் கூட, நம்முடைய மொழியைச் சார்ந்தவர்கள், நம்முடைய மொழியை தாங்கிப் பிடிக்க நினைப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதலோ, அந்த நபர்களின் கருத்துரிமையை எதிர்த்து குரல் கொடுப்பதோ, பாஜகவின் நோக்கம் கிடையாது, வழக்கம் கிடையாது.
ஏ.ஆர்.ரஹ்மான், பல இடங்களுக்குச் சென்று, ஆஸ்கர் மேடைக்குச் சென்று ஆஸ்கர் வாங்கியபோதுகூட அங்கும் தமிழில் பேசி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அந்த மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கு என்று பேசியிருந்தார். அது நம் அனைவருக்குமே பெருமைதான். எனவே அனைவருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அதில் எந்தத் தவறும் கிடையாது. எங்களுடைய கருத்தும் அதுதான்.
எந்த காலத்திலும் இந்தி திணிப்பை பாஜக எதிர்த்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து எதிர்ப்போம் என்பதில் ஒரு வாக்குவாதம், விவாதம் வேண்டாம் என்பதற்காகத்தான் இப்போது முற்றுப்புள்ளி வைக்கின்றோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT