Published : 12 Apr 2022 03:26 PM
Last Updated : 12 Apr 2022 03:26 PM
காரைக்கால்: நிழல் இல்லாத நாள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அமைப்புகள் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை காரைக்காலில் இன்று நடைபெற்றது.
சூரியன் செங்குத்தாக வரும்போது ஓரிடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. இதுவே நிழலில்லா நாள் எனப்படுகிறது. இது குறித்து அறிவியல் ரீதியான விளக்கங்களை அறியப்படுத்தும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் விஞ்ஞான் பிரச்சார், விஞ்ஞான பாரதி அமைப்புகள், புதுச்சேரி அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியன இணைந்து காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரியில் ”நிழல் இல்லாத நாள்” குறித்த பயிற்சி முகாமை நடத்தின.
காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், நிழல் இல்லாத நாள் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம், இந்த நாளை எப்படி துல்லியமாகக் கணக்கிடுவது? இந்த நாளில், ஒரு பகுதியிலிருந்து கொண்டு மற்றொரு பகுதியின் நேரத்தை, பூமியின் சுழற்சி வேகத்தை எப்படி கணக்கிடுவது?, நாம் வசிக்கும் பகுதியில் இந்த நாள் தென்படுவதை எப்படி கண்டறிவது?,
நமது பண்டைய காலத்தில் உத்ராயணம், தட்சிணாயணம் என்று குறிப்பிடப்பட்டதற்கும், இதற்கும் உள்ள தொடர்பு, நிழல் இல்லாத நாள் தொடர்பான செல்போன் செயலி (ZAD)குறித்த தகவல்கள் உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கங்களுடன் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டது.
கலிலியோ அறிவியல் மன்றத் தலைவர் உடுமலை கண்ணபிரான் இணைய வழியாகவும், விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் மணிகண்டன் நேரடியாகவும் பங்கேற்று அறிவியல் ரீதியான விளக்கங்களை எடுத்துக் கூறினர். ஏப்.18 ம் தேதி காரைக்காலிலிருந்து கோவை வரை ஒரே நேர்க்கோட்டில் உள்ள பகுதிகளில் "நிழல் இல்லாத நாள்2" தென்படும் என்றும், இவற்றை அந்தந்த பகுதியில் உள்ளோர் எப்படி அறிந்து கொள்வது என்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டதாக மணிகண்டன் தெரிவித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணபிரசாத், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT