Published : 12 Apr 2022 12:39 PM
Last Updated : 12 Apr 2022 12:39 PM

கரூர் | நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட்; முன்னாள் அமைச்சர் கூறிய ஊழல் புகாரின் மீது நடவடிக்கை

கரூர்: கரூர் மாவட்டத்தில் சாலை பணி எனக்கூறி திமுக ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடிக்கு மேல் பணம் வழங்கி ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை உள்ளிட்ட 4 சாலைகள் போடாப்படாமலே திமுக ஒப்பந்ததாரரான சங்கர் ஆனந்தின் சங்கர் ஆனந்த் இன்ப்ரா, கரூர் என்ற கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடிக்கு மேல் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் துணையுடன் பணம் வழங்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த 5ம் தேதி டிஆர்ஓ-விடம் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்ட பகுதிகளில் தடயங்களை அழிக்கும் வகையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர், டிஆர்ஓ ஆகியோரிடம் அதிமுகவினர் கடந்த 6, 7ம் தேதிளில் புகார் அளித்தனர். மேலும் கடந்த 8ம் தேதி தலைமை செயலாளரிடம் விஜயபாஸ்கர் புகார் அளித்தார்.

கடந்த 8ம் தேதி இரவு எம்.சாண்ட் ஏற்றி சென்ற திமுக ஒப்பந்ததாரரான சங்கர் ஆனந்தின் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை கோடங்கிபட்டி பகுதியில் அதிமுக-வினர் தாக்கி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 9ம் தேதி எம்ஆர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியரிடம் மேற்கண்ட சாலை ஊழல், தடயங்களை அழிக்க முற்பட்டது, திமுக ஒப்பந்த நிறுவன ஊழியர் அளித்த பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

திமுக ஒப்பந்ததாரரான சங்கர் ஆனந்த் நிறுவன ஊழியர் அளித்த புகாரின் பேரில் லாரிக்கு தீ வைத்த சம்பவத்தில் அதிமுக மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தானேஷ் என்ற முத்துகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிகா, கரூர் ஒன்றியச் செயலாளர்கள் கமலக்கண்ணன், மதுசூதன், கரூர் மத்திய மாநகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சிலர் மீது தாந்தோணிமலை போலீஸார் நேற்று முன்தினம் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 12ம் தேதி) நெடுஞ்சாலை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கணக்காளர் பெரியசாமி ஆகிய 4 பேரை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் புகாரின் பேரில் நெடுஞ்சாலைத் துறையில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x