Published : 19 Apr 2016 12:15 PM
Last Updated : 19 Apr 2016 12:15 PM
அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் திருநங்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது எனவும், அரசியல் கட்சிகளிடம் தேர்தல் விருப்ப மனு அளித்திருந்த போதிலும் அவர்களை பரிசீலிக்காத அரசியல் கட்சிகள் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் வரும் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக திருநங்கைகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 6-ம் தேதி முதல் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான அரவான் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு தொடங்கி நாளை இரவு வரை நடைபெறும். இந்த விழாவில் இந்தியா முழுவதிலிமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு, கோயில் பூசாரி மூலம் தாலி கட்டிக் கொண்டு, அதை உடனடியாக மறுநாள் அறுத்தெறியும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்துள்ளர். அப்போது சென்னையைச் சேர்ந்த திருநங்கைகளின் உரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த ஆர்.ஜீவா கூறும்போது, "திருநங்கைகள் இன்று பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை சமூகம் ஒரு கேலி மனிதராக பார்ப்பதை தவிர்க்கவேண்டும்
தற்போது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆண், பெண் மற்றும் இதர இனம் என குறிப்பிடுகின்றனர். நாங்களும் மனிதர்கள் தான், எங்களை இதர இனம் என ஏன் குறிப்பிடவேண்டும், திருநங்கைகள் என குறிப்பிடுவதில் என்ன தயக்கம் உள்ளது. தேர்தல் ஆணையம் இதை பரிசீலிக்கவேண்டும்" என்றார்.
பார்ன் டூ வின் என்ற அமைப்பைச் சேர்ந்த திருநங்கை ஸ்வேதா கூறுகையில், "தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளிடம் 3 திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தனர். ஆனால் எந்த அரசியல் கட்சியும் எங்களை பரிசீலிக்கவில்லை. அதேபோன்று அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் திருநங்கைகளின் நலன் குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே மூத்த திருநங்கைகளை ஆலோசித்து தனிக் கட்சி துவங்கத் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் எங்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வாய்ப்புக் கிட்டும். பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT