Published : 13 Apr 2016 08:13 AM
Last Updated : 13 Apr 2016 08:13 AM
தானே புயலின் போது முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற் கொண்டதாகக் கூறும் முதல்வர் தனது பிரச்சாரக் கூட்டத்தின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு எடுக்க அதிமுகவினருக்கு உத்தரவிடுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின்போது, கடும் வெயி லையும் பொருட்படுத்தாமல் 5 மணி நேரம் காத்திருந்த பெண்கள் பலர் மயக்கமடைந்தனர். மயக்க நிலையில் 19 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டதால் அதில் 2 பேர் உயிரிழக்க நேர்ந்தது.
கூட்டத்துக்கு இலக்கு
விருத்தாசலத்தில் அதிமுக பிரச்சாரத்துக்கு ஒரு வேட்பாளருக்கு தலா 20 ஆயிரம் பேர் எனவும், 13 வேட்பாளர்களுக்கும் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு தலைக்கு 300 மற்றும் சாப்பாடு என நிர்ணயம் செய்யப்பட்டு மினி டெம்போக்கள் மூலம் ஆட்கள் திரட்டி வரப்பட்டனர்.
கூட்டத்துக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் பேரை திட்டவேண்டும் என்ற இலக்குடன் கிராமப் புறங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஏப்ரல் 11-ம் தேதி காலை 11 மணிக்கே கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அழைத்துவரப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட விளை நிலத்தில் வெப்பத்தின் வெளிப்பாடு அதிகமிருக்கும் சூழலில் தடுப்புக் கட்டைகளுக்குள் அமர வைக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெளியேற முயற்சித்தபோது, அவர்களை காவல் துறையினர் தடுத்ததால் பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அமர வைக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டோ அல்லது உணவோ வழங்கப்படவில்லை.
கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் கேட்டபோது, இப்போது சாப்பாடு கொடுத்தால் அந்த இடம் குப்பை கூளமாகிவிடும் எனவும், சாப்பிட்டதும் அனைவரும் எழுந்து சென்று விடுவார்கள் எனவும் காரணம் கூறி அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை.
ஆபத்தான வெயில்
தற்போது காலை 11 முதல் பிற்பகல் 3 வரையிலான வெயில் மிகவும் ஆபத்தானது என்கிறார் சுகாதாரத் துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநர் மதிவாணன். மேலும் அவர் கூறும்போது, ‘சாதாரணமாக ஒருவருக்கு உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு (metabollism) 2 லிட்டர் தண்ணீர் தேவை. தற்போது வெயில் கொளுத்தும் நிலையில் 5 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். வெயிலால் உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாகவும் மூச்சுக் காற்றாகவும் வெளியேறும்போது உடலின் தண்ணீரின் அளவு குறையும். தண்ணீர் குறைய குறைய போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையும். அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெயிலில் நின்றால் அவர் மயக்க நிலை அடைவார். அவ்வாறு மயக்கமடைபவர்களை உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் அவர் விரைவில் உயிரிழக்க நேரிடும்’ என்றார்.
நெரிசலில் சிக்கி இருவர் இறந் தவர்களில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் முடி திருத்தும் கடை நடத்தி வந்தவர். சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகரன் டேவிட், விவசாயக் கூலி. இருவருக் கும் தலா 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு சென்றுவந்த இருவரின் உயிரிழப்பால் அவர்களின் குடும்பத்தினர் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது.
விருத்தாசலம் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ‘2011-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலின்போதும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை பேரிடரின்போது, எனது தலைமை யிலான அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது’ என குறிப்பிட்டார்.
அதேபோல முதல்வர் பங்கேற் கும் கூட்டங்களிலும் அதிமுக மாவட்டச் செயலாளர்களோ காவல் துறையினரோ முன்னெச்சரிக் கையாக செயல்பட்டிருக்கலாமே என்கின்றனர் வாக்காளர்கள்.
மாலை 6 மணிக்கு மேல் ஹெலிகாப்டரை இயக்குவதில் இடர்பாடு இருப்பதால் பிற்பகல் வாக்கில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள நேரிடுவ தாக அதிமுகவினர் காரணம் கூறுகின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்களின் சிரமத்தை அவர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
வெயிலில் இருந்து மக்களை காப்பாற்ற பந்தல் அமைப்பது, பிரச்சாரத் திடலில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செல்வது போன்ற செயல்களில் அதிமுகவினர் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா 2014 மார்ச் 11-ம் தேதி சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கிய ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தற்போது ஏப்ரல் 11-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தின் போது 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT