Published : 12 Apr 2022 07:44 AM
Last Updated : 12 Apr 2022 07:44 AM

தம்பியின் கல்விக்காக டிராக்டர் ஓட்டும் சகோதரர்; பெற்றோர் உயிரிழந்துவிட்ட நிலையில் ஆதரவு கரம் நீட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகொழப்பலூர் அருகே இமாபுரம் கிராமத்தில் குடிசை வீட்டில் வசிக்கும் ராஜாமணி, ராஜ்குமார்.

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே பெற்றோர் உயிரிழந்துவிட்டதால் தம்பியின் கல்விக்கு தோள் கொடுக்க, தனது உயர்கல்வி ஆசையை துறந்து டிராக்டர் ஓட்டும் பணியில் சகோதரர் ஈடுபட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பெரியகொழப்பலூர் அருகே இமாபுரம் கிராமத்தில் வசித்தவர் டிராக்டர் ஓட்டுநர் பூபாலன். இவர், இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே 4-ம் தேதி உயிரிழந்தார்.

இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு ராஜாமணி(19), ராஜ்குமார்(14) என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர்நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பச்சையம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்த ராஜாமணியும், ராஜ்குமாரும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே கிராமத்தில் வசிக்கும் தாத்தா கிருஷ்ணன், பாட்டி அமராவதி ஆகியோர் பேரப்பிள்ளைகளை அரவணைத்தாலும், பெற்றோருக்கு ஈடாக பாதுகாக்க முடியவில்லை. குடிசை வீட்டில் வசிக்கும் அண்ணன், தம்பிக்கு அடுத்த வேளை உணவு என்பது கேள்விக்குறியானது.

பெரியகொழப்பலூர் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தனது தம்பி ராஜ்குமாரின் கல்வி பாதிக்கக்கூடாது, பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக, தந்தையின் வழியில் டிராக்டர் ஓட்டும் பணியில் ராஜாமணி ஈடுபட்டுள்ளார். இவர், பிளஸ் 2 வகுப்புவரை படித்துள்ளார். உயர் கல்வி படிக்க வேண்டும் என விருப்பம் இருந்தாலும், தம்பியின் கல்விக்கு தோள் கொடுக்க, தனது கனவை துறந்து டிராக்டர் ஓட்டி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் கூலியை கொண்டு, அவர்கள் இருவரும் பசியாற்றிக் கொள்கின்றனர்.

தம்பியின் படிப்பு பாதிக்க கூடாது

இதுகுறித்து ராஜாமணி கூறும்போது, “எனது தம்பி ராஜ்குமார் 9-ம் வகுப்பு படிக்கிறான். அவனது படிப்பு தொடர வேண்டும். என்னைபோன்று அவனது படிப்பும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் நான் டிராக்டர் ஓட்டுகிறேன். எனக்கும் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என விருப்பம் உள்ளது.

ஆனால், சூழ்நிலை சரியில்லை. எங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது தம்பி உயர்கல்வி வரை படிக்க அரசு உதவ வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x