Published : 11 Apr 2022 06:12 PM
Last Updated : 11 Apr 2022 06:12 PM

இந்தி விவகாரம் | ’வரலாறு தெரியாமல் எரியும் நெருப்பில் விரலை விடாதீர்’ - கி.வீரமணி

கி.வீரமணி | கோப்புப் படம்.

சென்னை: "மீண்டும் இந்தித் திணிப்பா? வரலாறு தெரியாமல் எரியும் நெருப்பில் விரலை விட வேண்டாம்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்தை ஆட்சி மொழியிலிருந்து அறவே நீக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்தி மொழியையே பயன்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது, நாட்டில் ஒரு பெரும் புயலையே கிளப்பி வருகிறது. ஆட்சியாளர்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, கற்காவிட்டாலும்கூட - பாலபாடம் - எந்த நாட்டிலும், மக்களிடையே மிகவும் உணர்ச்சியைக் கிளப்பக்கூடிய பிரச்சினை - மொழிப் பிரச்சினையாகும் என்பதே! (Most Sensitive Problem). இதில் கை நுழைப்பது, கொழுந்துவிட்டு எரியும் தீக்குள் விரலை விட்ட விபரீதம் ஆகிவிடும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

வங்கதேசம் உருவானது எந்த அடிப்படையில்? இந்தியாவை விட்டு மத, கலாசார அடிப்படையில் பிரிந்த அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, வங்கதேசம் என்ற 'பங்களாதேஷ்' உருவானதற்கு எது அடிப்படை? வங்க மொழியை - அந்நாடு புறக்கணித்துவிட்டு, பெரும்பான்மை என்ற பெயரில் உருது மொழியை கிழக்கு வங்க மாநிலத்திலும் திணித்ததுதானே! இதை மறந்து ஒரே நாடு, ஒரே மொழி (சமஸ்கிருதம், இந்தி), ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை - நாட்டின்மீது திணிப்பது, நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாட்டுக்கு உலை வைப்பதாகாதா? 'புருட் மெஜாரிட்டி' என்று அதிகப் பெரும்பான்மை என்ற மணல்மேட்டில் கட்டடம் கட்டி மகிழலாமா?

உள்துறை அமைச்சர், ஒன்றிய ஆட்சியை இயக்கும் ஆர்எஸ்எஸ் முதலிய பாஜக பிரதமர் மோடி தலைமையில் ஜனநாயகம் மூலம் ஆட்சியைப் பிடித்து, அதனை அதிவேகமாக எதேச்சதிகாரமாக ஆக்கி வருகின்றவர்கள் வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப் படிக்கவேண்டும்.

'இந்தியை பெரும்பான்மை மக்கள் பேசுகிறார்கள்' என்ற வாதம் அறிவுப்பூர்வமானதா? பன்மொழிகளும், பல கலாசாரங்களும் உள்ள ஒரு கூட்டாட்சியில், 'வேற்றுமையில் ஒற்றுமை' (Unity in Diversity) காண இப்படிப்பட்ட மொழித் திணிப்புகள் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பதை ஆட்சி - அதிகாரம் படைத்துள்ள மத்தியில் உள்ளவர்கள் உணராமல், கூரைமீது ஏறி கொள்ளிக்கட்டையைச் சுழற்றலாமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் 'மொழிகள்' என்ற தலைப்பில் 22 மொழிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மொழிக்கு மட்டும் ஏன் இப்படி சிம்மாசனம்? புழக்கத்தில் - பேச்சு வழக்கு, எழுத்து, புராதன மொழி - வாழும் மொழி - எம்மொழி செம்மொழி தமிழுக்கு உரிய மரியாதை இவ்வாட்சியில் கிடைக்கிறதா?

எனவே, நாட்டில் வேலை கிட்டாத நிலை, பண வீக்கம் - ஏறும் விலைவாசிகள், பரவிவிட்ட வறுமை, இப்படிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்தித் திணிப்பில் ஈடுபட்டால், அதற்கு ஆட்சியாளர்கள் கடும் விலையைத் தரவேண்டும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு மட்டும் ஹிந்தியை எதிர்க்கவில்லை; பல மாநிலங்களிலும் அவர்கள் மொழி உணர்வை உரிமையெனக் கருதிடுகிறார்கள் என்ற உண்மையை ஏனோ உணர மறுக்கிறார்களோ, 'டெல்லியில் ஆளும் நவீன ராஜாக்கள்' என்பதே நம் கேள்வி. எனவே, மக்களின் உணர்ச்சி நெருப்போடு விளையாடவேண்டாம்''என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x