Published : 11 Apr 2022 08:08 AM
Last Updated : 11 Apr 2022 08:08 AM

பெரியார், அண்ணா, கருணாநிதி மீது ஆணையாகக் கூறுகிறேன்... திராவிட மாடலை நாடு முழுவதும் விதைப்போம் - மு.க.ஸ்டாலின் உறுதி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கினார் மாவட்டச் செயலரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன். உடன், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: திராவிட மாடலை நாடெங்கும் விதைப்போம் என்று பெரியார், அண்ணா, கருணாநிதி மீது ஆணையாகக் கூறுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இணைந்திருக்கும் இயக்கம் திமுக. உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

எனது அரசியலுக்கு அடித்தளம் அமைத்தது செங்கல்பட்டு மாவட்டம்தான். 10 ஆண்டுகளாக பாதாளத்தில் இருந்த தமிழகத்தை 10 மாதங்களில் தலைநிமிரச் செய்துள்ளோம். நெருக்கடியான காலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்துள்ளோம். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை நாள் முழுக்க சொல்லமுடியும். வேண்டுமென்றே குறை சொல்பவர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை.

சமூகப் பாதுகாப்பு, சமூக நீதி, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். நாம் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அவர்களுக்கு வேலை கொடுத்து வருகிறோம்.

அனைவருக்கும் உயர் கல்வி,தகுதிக்கேற்ற வேலை, மருத்துவசேவை, கிராமங்கள், நகர்ப்புறங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் என எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்வததுதான் திராவிட மாடல் ஆட்சி.

தமிழக மக்களுக்கு அநீதி

தமிழகத்தின் உரிமைகளைப் போராடி, வாதாடி பெறுவோம். சட்டப்பேரவையில் இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பினோம். அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் மறுத்து வருகிறார். இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

நான் பிரதமரிடம் போய் கைகட்டி, வாய் பொத்தி, கீழே விழுந்து எதையும் கேட்கவில்லை. தமிழகத்தின் உரிமைகளை உரிமையோடு கேட்டேன்.

மாநிலங்களைப் புறக்கணித்து, கற்பனை இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள். இந்தி மட்டும் பேச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். தமிழகத்தைப்போல பிற மாநிலங்களும் இதை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். சமூக, சமத்துவத்துக்கு வழிகாட்டும் தமிழகமண், திராவிட மண் என்பதை மறக்கவேண்டாம். திராவிட மாடலை நாடெங்கும் விதைப்போம் என்று பெரியார், அண்ணா, கருணாநிதி மீது ஆணையாகக் கூறுகிறேன்.

தவறு செய்தால் தண்டனை

நமக்கு கிடைத்த வெற்றி என்றும் நிலைக்க உழைக்க வேண்டும். பழிச்சொல் வரக்கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் கருணாநிதியின் உடன்பிறப்பு கிடையாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுவார்கள். திமுகவினர் மக்களுடன் மக்களாகவே இருக்க வேண்டும்.

திமுக அரசு செயல்படுத்தும் முன்னோடித் திட்டங்களை கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ., எம்.பி.க்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் ஆகியோர் வீதி, வீதியாக, வீடு, வீடாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

மக்களிடம் நற்பெயர் வாங்கும் வகையில் செயல்பட வேண்டும். தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலம் என்ற நிலையை அனைவரும் சேர்ந்து உருவாக்கவேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலரும், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 27,850 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x