Published : 20 Apr 2016 07:49 PM
Last Updated : 20 Apr 2016 07:49 PM
திமுக, அதிமுக இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.இதையடுத்து சுவர் விளம்பரத்துக்கான இடம் பிடிக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
அதன்படி நெய்வேலித் தொகுதிக்குட்பட்ட கீழிருப்புக் கிராமத்தில் சுவர் விளம்பரப் பணிகள் படுவேகமாக நடைபெறுகிறது. ஒரு வீட்டின் சுவரில் அதிமுக சின்னம் வரையும் பணியில் சில இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியைக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் இரட்டை இலை சின்னத்தை வரைந்தும், அதன் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வலியுறுத்தும் வாசகங்களையும் எழுதிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை சந்தித்து சின்னம் வரைவது குறித்து கேட்டபோது, கீழிருப்பு கிராம அதிமுக ஊராட்சி செயலாளர் மாசிலாமணி தலைமையில் வீட்டுச் சுவர்களில் அதிமுக சின்னம் வரையும் பணி நடைபெறுவதாக தெரிவித்தனர்.
இந்த சின்னம் வரையும் பணியை திமுகவைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மேற்பார்வையில், மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் மதிமோகன், கலைச்செல்வன், திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்தனர்.
அப்போது முத்துச்சாமி கூறும்போது, ''நாங்கள் அனைவரும் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலை செய்துவருகிறோம். தற்போது தேர்தல் என்பதால் சுவர் விளம்பரப் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதன்மூலம் தற்போது ரூ.800 முதல் 1000 வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.
தொழில் வேறு கட்சி வேறு என்ற அடிப்படையில் இந்தப் பணியை செய்துவருகிறோம். எங்களுக்குள் இருக்கும் கட்சி வேறுபாட்டை தொழிலுக்குள் தொடர்பு கொள்ளமாட்டோம். தற்போது அதிமுகவினருக்காக செய்கிறோம், திமுகவினரும் எங்களிடம் பணி ஒதுக்கியுள்ளனர்.
இதில் பெரும்பான்மையோர் மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்களாக இருப்பதால் மக்கள் நலக் கூட்டணிக்கு இலவசமாக சுவர் விளம்பரம் செய்வோம். அதேநேரத்தில் எங்கள் குழுவில் உள்ள திமுகவைச் சேர்ந்தவருக்கு உரிய ஊதியத்தை கொடுத்து விடுவோம்'' என்றனர்.
கிராமங்களில் இளைஞர்களில் இந்த பாகுபாடற்ற செயல்பாடு பலரை புருவம் உயர்த்தவைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT