Published : 10 Apr 2022 05:44 PM
Last Updated : 10 Apr 2022 05:44 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், " தமிழகத்தில் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஏப்.10) திறந்து வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: " மதுரையில் பல்வேறு மருத்துவ மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னுயிர் காப்போம் மருத்துவத் திட்டத்தில் 3 மாதத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.55 லட்சத்தில் பொது மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவும், ரூ.70 லட்சத்தில் அறுவை சிகிச்சை பிரிவும் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 350 முதல் 400 பேர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு இங்கு வருகின்றனர். தீக்காயப்பிரிவை மேம்படுத்த ரூ. 35 லட்சத்தில் புதிய சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகமான மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 82 திருநங்கைகள், 122 திரு நம்பிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 4 பாலின மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மும்பை, தாய்லாந்துக்கு சென்று இச்சிகிச்சை பெறும் நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை கிடைக்கிறது. தமிழகத்திலுள்ள பிற அரசு மருத்துவமனையிலும் இந்த சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.தென் தமிழக மக்கள் சிசிக்சைக்காக அதிகம் வருவதால் இம்மருத்துவனைவயின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜப்பான் நிதியுதவியில் தரைத்தளம் உள்ளிட்ட 6 அடுக்கு புதிய மருத்துவ கட்டிடங்கள் ரூ. 128 கோடியில் அமைகிறது. இதற்கான கட்டுமானப் பணி விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ. 139 கோடியில் உயர்தர மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும். டிசம்பர் இறுதிக்குள் 6 அடுக்கு கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனை வளாகத்தில் 7 புதிய கட்டிடங்கள் ரூ. 69 கோடியில் கட்டப்படும். குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அதிநவீன படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ரூ.360 கோடியில் தமிழகத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு 21,00 படுக்கைகள் வழங்கும் திட்டத்தை ஏப்ரல் 14-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஒரு மாதமாகவே கரோனா இறப்பு இல்லை என்பது மகிழ்ச்சி. தினமும் 20-30 என தொற்று நிலை இருந்தாலும், தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த புதிய திரிபு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மருத்துவப் பணிக்கான பாற்றாக்குறை உள்ள மருத்துவமனைக்கு பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப் படும். புதிய காலிப்பணியிடங்கள் எம்ஆர்பி தேர்வு மூலம் நியமிக்கப்படும்.
போதை மாத்திரை, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மருந்தகங்கள் கண்காணிக்கப்படும். கரோனா காலத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கான பணிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிந்துள்ளது. கரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, மக்கள் தேடி மருத்துவத் திட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 ஆயிரம் செவிலியர்கள் மக்கள் தேடி மருத்துவத்திற்கு தேர்ந்தெடுக்கும் திட்டம் உள்ளது. அப்போது, பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், தொடர்ச்சியான காலியிடங்களை நிரப்பும்போதும், முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் இல்லம்தேடி மருத்துவ திட்டத்தில் கள்ளிக்குடி அருகிலுள்ள மைவிட்டான்பட்டியில் கண்டறியப்பட்ட பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார். திருமங்கலம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, மருத்துவச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுக்கான கட்டிடங்களை திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT