Published : 12 Jun 2014 09:00 AM
Last Updated : 12 Jun 2014 09:00 AM

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரே ஒரு ஜெராக்ஸ் மெஷின்- புத்தகங்களை நகல் எடுக்க முடியாமல் மாணவர்கள் அவதி

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரே ஒரு ஜெராக்ஸ் மெஷின் மட்டும் இருப்பதால், புத்தகங்களை விரைவாக ஜெராக்ஸ் எடுக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், ஐஐடி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அண்ணா நூலகத்துக்கு தினமும் வந்து செல்கின்றனர். இவை தவிர யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளும் அதிக அளவில் வருகின்றனர். இங்குள்ள புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால், நூலகத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்து வந்தனர். முக்கியமான தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க ஒரு ஜெராக்ஸ் மிஷினை, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நூலக நிர்வாகம் ஏற்பாடு செய்து செய்தது. 8 மாடிகள் கொண்ட நூலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் தரை தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. எந்த தளத்தில் இருப்பவரும் ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய புத்தகத்தை அங்குள்ள ஊழியர்கள் மூலம் தரை தளத்துக்குக் கொடுத்து அனுப்ப வேண்டும். அங்கு ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிறகு, தரை தளத்துக்கு சென்று அதைப் பெற்றுக் கொண்டு, பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றி மாணவ, மாணவிகள் புத்தகங்களை ஜெராக்ஸ் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் ஒரே ஒரு ஜெராக்ஸ் மெஷின் மட்டும் இருப்பதால், புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் அங்குள்ள ஊழியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து நூலக அதிகாரிகள் கூறியதாவது: இந்த நூலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஜெராக்ஸ் மெஷின் இல்லை.

மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வசதிக்காக தற்போது ஒரு ஜெராக்ஸ் மிஷினை ஏற்பாடு செய்துள்ளோம். அதிக அளவில் புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்க வருகின்றனர். அதனால் ஒரு ஜெராக்ஸ் மெஷின் போதவில்லை. இன்னும் 5 ஜெராக்ஸ் மெஷின்களை அரசு ஏற்பாடு செய்து தந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

புதிதாக புத்தகம் இல்லை

கடந்த திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தது. இதனால், இந்த நூலகத்துக்கு புதிதாக புத்தகங்கள் கூட கடந்த 4 ஆண்டுகளாக பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x