Published : 10 Apr 2022 04:57 AM
Last Updated : 10 Apr 2022 04:57 AM

தமிழகத்தில் இருமொழி கொள்கைதான்; இந்தி திணிப்பை ஏற்க முடியாது - ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படுவதாகவும், இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்: மத்திய அமைச்சரவைக்கான 70 சதவீத நிகழ்ச்சி இந்தியில்தான் தயாரிக்கப்படுகிறது. மற்ற மொழிகள் பேசும் மாநில மக்கள், இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் பேசியிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அண்ணாவினால்தான் இந்தியாவில் இன்றுவரை ஆங்கிலம் இருக்கிறது. அவரின் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: நாட்டின் ஒரு பகுதியில் வழக்கத்தில் இருந்துவரும் மொழியை, ஒரு நாட்டின் பொது மொழியாக திணிப்பது, பிற பகுதிகளின் தாய்மொழி வளர்ச்சியை தடுக்கும் பேராபத்தானது. மாநிலங்களின் தாய்மொழிகள் மற்றும் மாநில அரசின் நிர்வாக மொழிகளை மத்திய அரசின் நிர்வாக மொழிகளாக ஏற்பதன் மூலம்தான் நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் வலிமை பெற்று வளரும்.

மதிமுக பொது செயலாளர் வைகோ: தமிழகத்தில் 1965-ல் நடைபெற்ற 4-வது இந்தி எதிர்ப்புப் போராட்டம், நாட்டையே உலுக்கியதை மத்திய பாஜக அரசுக்கு நினைவுபடுத்துகிறேன். இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு மத்திய பாஜக அரசு வழி வகுத்துவிடக் கூடாது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்தியாவில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடு கண்டனத்துக்குரியது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்: இந்தி திணிப்பு கொள்கையை கைவிட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் காஸ், சுங்கக் கட்டணம், மருந்துகளின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இந்திமொழி திணிப்பு முயற்சி நடக்கும் எனில், தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

இவ்வாறு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x