Published : 10 Apr 2022 08:12 AM
Last Updated : 10 Apr 2022 08:12 AM

ரூ.6,123 கோடியில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: மழைநீர் வடிகால்கள் அமைக்க ரூ.1,235 கோடி ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சியில் ரூ.6,123 மதிப்பிலான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மழைநீர் வடிகால்கள் அமைக்க ரூ.1,235 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ரூ.6,123 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை மேயர் ஆர்.பிரியா, நிலைக் குழுத் (வரி விதிப்பு மற்றும் நிதி) தலைவர் சர்பஜெயா தாஸ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

திருக்குறளுடன் பட்ஜெட் உரையை மேயர் பிரியா வாசிக்கத் தொடங்கியபோது, சொத்து வரி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று 145-வது வார்டு அதிமுக உறுப்பினர் த.சத்தியநாதன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கோரினார்.

அதுகுறித்து பேச பின்னர் வாய்ப்புஅளிக்கப்படும் என்று மேயர்தெரிவித்தார். இதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் சிலர், சொத்துவரி உயர்வைக் கண்டித்து கருப்புச் சட்டையுடன் மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்புக்காக ரூ.36 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த 64 திட்டங்களை பட்ஜெட்டில் மேயர் அறிவித்தார்.

நடப்பு நிதியாண்டில் சொத்து வரி வருவாய் ரூ.800 கோடி, தொழில் வரி ரூ.745 கோடி, முத்திரைத் தாள் மீதான கூடுதல் வரி ரூ.170 கோடி, மாநில நிதிக் குழு மானியம் ரூ.500 கோடி, இதர வருவாய் ரூ.879 கோடி கிடைக்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சிப் பணியாளர் சம்பளம், ஓய்வூதியம் வழங்க ரூ.1,837 கோடி, கடனுக்கான வட்டி செலுத்த ரூ.148 கோடி, கொசஸ்தலை ஆறு, கோவளம் வடிநிலப் பகுதி மற்றும் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.1,235 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடிகால்களுக்கு அதிக நிதி

சென்னை மாநகரப் பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான நிலையில், இந்த பட்ஜெட்டில் அதிக அளவு நிதி மழைநீர் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை மேற்கொள்ள ரூ.424 கோடி, சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள ரூ.137 கோடி, மண்டலங்களில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ.147 கோடி, பூங்காமற்றும் விளையாட்டுத் திடல்கள்அமைக்க ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டுஉள்ளது.

ரூ.364 கோடி பற்றாக்குறை

மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி முன்பு ரூ.60 கோடியாக இருந்தது. அதாவது 200 உறுப்பினர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.70 கோடியாக உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ரூ.363 கோடியே 53 லட்சம் பற்றாக்குறை கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

பின்னர், நிலைக் குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் ஆகியோர் பட்ஜெட்டை வரவேற்றுப் பேசினார். அப்போது, மாமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியை ரூ.1 கோடியாக அதிகரித்தல், அனைத்து வார்டுகளிலும் மகளிருக்கான சிறப்பு உடற்பயிற்சி கூடம் அமைத்தல், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா உறுதியளித்தார். கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வார்டு மேம்பாட்டு நிதி முன்பு ரூ.60 கோடியாக இருந்தது. அதாவது 200 உறுப்பினர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.70 கோடியாக உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x