Published : 10 Apr 2022 04:00 AM
Last Updated : 10 Apr 2022 04:00 AM
அரசு விதித்த கரோனா கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்த தனியார் மருத்துவனை தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மானாமதுரையை சேர்ந்த செல்வராணி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் கணேசன் ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர். 2021 டிசம்பரில் திடீரென மயங்கி விழுந்தார். மானாமதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது புற்றுநோய் இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்றனர்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது எனது கணவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், கரோனா இல்லை எனக்கூறி அவசரமாக அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்த 2 நாட்களில் கரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். முறையாகப் பதில் அளிக்காமல், மருத்துவ வசதிகள் செய்யாமல் லட்சக்கணக்கில் பணம் செலுத்துமாறு கூறினர்.
எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றுவதாக நாங்கள் கூறினோம். மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்துமாறு கூறினர். புற்று நோய் மற்றும் கரோனாவுக்காக மொத்தம் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் கட்டினோம். ஆனால் ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்து 554-க்கு மட்டுமே ரசீது கொடுத்தனர். முறையாக செலவு விவரம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எனது கணவர் ஜனவரி 28-ல் உயிரிழந்தார்.
இது குறித்து முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பினேன். தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பிப்.11-ல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்து, தேசிய மருத்துவக் கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ போர்டு, சுகாதாரத் துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT