Last Updated : 10 Apr, 2022 04:15 AM

 

Published : 10 Apr 2022 04:15 AM
Last Updated : 10 Apr 2022 04:15 AM

காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும்: தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை

தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்

மதுரை

தென் மண்டல காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

தென்மண்டல ஐ.ஜி.யாகப் பணிபுரிந்த டிஎஸ்.அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஐ.ஜி.யாக அண்மையில் மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக தென் மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க்நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே மதுரை, நெல்லையில் எஸ்.பி.யாகப் பணியாற்றி உள்ளார்.இவரது பணிக் காலத்தில் கஞ்சா விற்பனையை ஒழித்தல், ரவுடிகளை ஒடுக்குதல், சமூக மோதலை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டினார்.

இந்நிலையில் அஸ்ரா கார்க் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்மண்டல ஐ.ஜி.யாகப் பொறுப்பேற்றார். நெல்லை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் சரக டிஐஜிக்கள், 10 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும்டிஎஸ்பிக்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது தங்களுக்குக் கீழ்பணிபுரியும் காவல் துறையினர் முறையாக, சரியாகப் பணியாற்றவேண்டும். குற்றத் தடுப்பு சம்பவங்களில் தீவிரம் காட்ட வேண்டும். இவற்றை அதிகாரிகளாகிய நீங்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை ஐ.ஜி. கூறினார்.

இதற்கிடையில் தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களிலுள்ள காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், ஐ.ஜி. அஸ்ரா கார்க் மைக் மூலம் தென்மண்டல காவல் துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். அப்போது தவறு செய்யும் போலீஸார் மீது கடும்நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்று அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் மைக் மூலம் பேசியதாவது:

ஏற்கெனவே அவரவர் பணிபுரிந்த இடங்களில் எப்படி பணியாற்றினீர்கள் என நான் கேட்க விரும்பவில்லை. இனிமேல் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டம் இன்றி, பக்கத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு எதிரான குற்றச் செயல் நடந்தாலும், உடனே காவல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பணிபுரியும் இடங்களில் கோஷ்டிப் பூசல் இருக்கக் கூடாது. அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். சரியான காரணமாக இருந்தால் காவல் துறையினருக்கு விடுமுறை வழங்க வேண்டும். வார விடுமுறையை பின்பற்றுங்கள். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் புகார்களை அலட்சியம் செய்யக்கூடாது. துரிதமாக விசாரித்து பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விசாரணை, நடவடிக்கையில் சாதி பார்க்கக் கூடாது. எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது. கொலை, குற்ற வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும். ரவுடிகள், கஞ்சா, போதைப் பொருட்கள், லாட்டரிஒழித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க அக்கறை செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் குறித்த புகார்களின் விசாரணையில் பாரபட்சம்,தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது முதலில் விளக்கம் கேட்கப்படும். காவல் துறையினரின் தவறு குறித்துஎனது கவனத்துக்கு வந்தால் 3 விதமான நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டம் பணியிடமாறுதல், அடுத்து சஸ்பெண்ட், தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.

நமக்கு கிடைத்த காக்கிச் சட்டைபணி கவுரவமானது. இந்த ‘இமேஜ்’பொதுமக்கள் மத்தியில் பாதிக்காமல், நேர்மையாகப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசி உள்ளார். ஓபன் மைக் மூலம் ஐ.ஜி.யின் இந்த எச்சரிக்கையால் தென் மண்டல காவல் துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x