Published : 10 Apr 2022 12:54 AM
Last Updated : 10 Apr 2022 12:54 AM

'அரசியல் பேச வேண்டாம்' - சென்னை மாநகராட்சியில் பட்ஜெட்டை முன்னிட்டு நடந்த விவாதங்கள்

சென்னை: ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கான மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. திமுக அதிமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தனது முதல் பட்ஜெட் உரையை தொடங்கிய மேயர் பிரியா ராஜன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதற்கு பிறகு 2022- 2023 ஆண்டு மாநகராட்சி வரவு செலவு பட்ஜெடை வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் மேயர் முன்னிலையில் தாக்கல் செய்தார். அதற்குப் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

அதன்படி நடைபெற்ற முக்கிய விவாதங்கள் பின்வருமாறு:

* மாமன்ற உறுப்பினர்களின் மாடு மேம்பாட்டு நிதிக்கு 35 லட்சம் போதாது 50 லட்சமாக உயர்ந்த என கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் கோரிக்கை வைத்தார் அதனை மேயர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்வதாக துணை மேயர் தெரிவித்தார்.

* ஆலந்தூர் மண்டலத்தில் சொத்து வரி உயர்வு அதிகமாக இருக்கிறது , சொத்து வரி உயர்வை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என ஆலந்தூர் மண்டல குழு தலைவர் சந்திரன் கோரிக்கை விடுத்த நிலையில், சொத்து வரி உயர்வை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நேற்று முதலமைச்சரிடம் பேசியுள்ளதாகவும், சொத்துவரி நிச்சயம் மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் துணை மேயர் மகேஷ்குமார் பதிலளித்தார்.

* வார்டு - 42 , ரேணுகா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மாநகராட்சி நிதி நிலை அறிக்கையின் மீது உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்காமல உடனே விவாதம் நடத்துவது ஏற்புபைடையதல்ல , உறுப்பினர்களின் விவாதம் சம்பிரதாயமாக இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இன்றைய நிதி நிலை அறிகைக்கை மூலம் மாநகராட்சி 788 கோடி வருவாய் பற்றாக்குறையாக உள்ளது தெரியவருகிறது. மாநகராட்சியின் கடன் விவரம் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை, இதன் மூலம் மாநகராட்சி நிதி நெருங்கடியில் இருப்பது தெரிய வருகிறது.

மக்களிடம் அதிக வரிமூலம் வருவாய் ஈட்டுவது சரியல்ல, சொத்து வரி வசூலித்தல் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்தில் வருவது. உள்ளாட்சி மன்றங்களின் சம்பந்தமின்றி மாநில அரசு சொத்து வரியை உயர்த்தி அரசாணை நிறைவேற்றியது உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரத்தை மீறும் செயல் என்று பேசினார்.

14 வது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் , உறுப்பினர் ரேணுகாவின் பேச்சை இடைமறித்து கோரிக்கையை மட்டும் பேசுமாறும் எதிர்க்கட்சியை போன்று பேச வேண்டாம் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து ரேணுகா தனது கோரிக்கைகளை கூறினார் . மேலும் உறுப்பினர் ரேணுகா பேசி முடித்த பின்னர், அடுத்த நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெறும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.

* பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் , மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த துணை மேயர் மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசிடம் பேசி பஞ்சாயத்ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சி செய்வோம் என்று கூறினார்.

* அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு நலம் அளிக்கும் வகையில் இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசுகையில், காங்கிரஸ் மன்ற உறுப்பினர்கள் பேசும்போது மத்திய அரசிடம் காலில் விழுந்து கடந்த அரசு பல்வேறு சலுகைகளை பெற்றதாக கூறியதாக குறிப்பிட்டார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அதிமுக மன்ற உறுப்பினர், உள்ளாட்சித் தேர்தலில் 5, 6 சீட்டுகளுக்காக அறிவாலயம் வாசலில் நின்றார்கள் என்று காங்கிரஸ் கட்சியினரை விமர்சனம் செய்தார்.

அப்போது காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூச்சலிட்டு மேஜைகளை தட்டியவாறு, திமுக ஒரே குடும்பமாக இருக்கிறோம். அதிமுகவும், பாஜகவும் ஒரே குடும்பமா என்று ஆவேசத்துடன் பேசினர்.

குறுக்கிட்டு பேசிய துணை மேயர், அமைதியாக நடைபெறும் அவையில் அரசியல் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி இரு தரப்பினர் வாதத்தை நிறுத்தினார்.

* அவையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் 39 வார்டு உறுப்பினர் ஜீவன் மற்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்தார். வரலாற்று சிறப்பு மிக்க அவை இது. சபை உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்ய வேண்டாம். அவர்கள் கருத்தை அவர்கள் பதிவு செய்யட்டும். அதனால் எதுவும் ஆக போவதில்லை. சபைக்குள் நடக்க வேண்டிய விஷயங்களை பேசுங்கள். மாற்று கட்சி தலைமையை அநாகரீகமாக பேசுவதை தவிருங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x