Published : 09 Apr 2022 03:45 PM
Last Updated : 09 Apr 2022 03:45 PM
சென்னை: 'இந்து', 'இந்தி','இந்தியா' என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.
ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது முதல், பல்வேறு வடிவங்களில் இந்தியை மெல்ல மெல்லத் திணித்திட முயல்வதும், இறந்த சம்ஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட வேலைசெய்வதுமான பாஜக அரசின் போக்குகள், மண்ணின் மக்களுக்கெதிரான ஆரிய முகத்தையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களையும், அதன் தனித்துவ அடையாளங்களையும் முற்றாகச் சிதைத்தழித்து 'இந்து', 'இந்தி','இந்தியா' என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும்.
பாஜக அரசின் இந்தித்திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழகமும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர் புரிவோம் எனப் பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச் செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT