Published : 09 Apr 2022 10:37 AM
Last Updated : 09 Apr 2022 10:37 AM
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலானது. சரியாக காலை 10 மணியளவில் மேயர் ஆர்.பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் முதன்முறையாக சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது.
அண்மையில் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது என்பதால், 6 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக 153 வார்டிலும், அதிமுக 15 வார்டிலும் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், மதிமுக. 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.
முன்னதாக சொத்து வரி உயர்வு குறித்து பேச அனுமதி கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நேரம் வழங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அனுமதி கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் மாநகராட்சி மாமன்றத்திலிருந்து அவர்கள் வெளியேறினர்.
பட்ஜெட் துளிகள்: * சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த பாலினக் குழுக்கள் அமைக்கப்படும்.
*70 பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்க ரூ.1.86 கோடி ஒதுக்கீடூ செய்யப்படும்.
*281 மாநகராட்சி பள்ளிகளில் 40 லட்சம் செலவில் கல்விக் கண்காட்சிகள் நடத்தப்படும்.
*72 லட்சம் மாணவர்களுக்கு 7.50 கோடி செலவில் சீருடை வழங்கப்படும்.
*நிர்யயா நிதி மூலம் 23.66 கோடியில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பள்ளிகளில் 5.47 கோடியில் கண்காப்பு கேமிரா பொருத்தப்படும்.
இவ்வாறாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இன்றைய பட்ஜெட் மதிப்பீடு ரூ.3,500 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் திடக்கழிவுமேலாண்மையை அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. கொசுத் தொல்லையும், கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதும் மாநகரின் அடையாளமாக மாறிவிட்டது. பெரும்பாலான மழைநீர் வடிகால்கள் கொசு உற்பத்தி மையமாக மாறிவிட்டன. வட சென்னைக் குழந்தைகளிடம் கால்பந்து, குத்துச் சண்டை மீது ஆர்வம் அதிகமாக இருந்தாலும், உரிய பயிற்சிக் களங்கள் இல்லை.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் இணையதளம் மூலமாக இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், நடைமுறையில் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. எனவே, இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படுமா என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT