Last Updated : 21 Apr, 2016 08:28 AM

 

Published : 21 Apr 2016 08:28 AM
Last Updated : 21 Apr 2016 08:28 AM

ஜெயலலிதா நீண்டகாலம் வாழ காளஹஸ்தியில் வேண்டுதல்: நேர்த்திக் கடன் செலுத்த 68 கிலோ வெள்ளிக் கவசம் - காத்திருக்கும் அதிமுக வேட்பாளர் நீலகண்டன்

முதல்வர் ஜெயலலிதா நீண்டகாலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டி காளஹஸ்தி சிவனுக்கு 68 கிலோ வெள்ளியில் கவசம் செய்துவைத்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்காகக் காத்திருக்கிறார் சிவபக்தனும் சென்னை திரு.வி.க.நகர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளருமான வ.நீலகண்டன் (வயது 70).

1965-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னை மேகலா திரையரங்கில் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் எம்.ஜி.ஆர். மன்றம் தொடங்கி அதன் செயலாளரானார் நீலகண்டன். அன்று முதல் அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர ரசிகர். அதிமுகவிலே இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் சேர்ந்து, இன்றுவரை இருந்து வருகிறார். இப்போது சென்னை திரு.வி.க.நகர் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் நீலகண்டன், ஏற்கெனவே இத்தொகுதியில் 2011-ம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்து, மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்றும் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என்றும் காளஹஸ்தி சிவனிடம் அவர் வேண்டியிருந்தார். இந்த நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினருக்கான சம்பளமாக தனக்கு கிடைத்த ரூ.34 லட்சத்து 4 ஆயிரத்து 862-யை முதல்வரிடம் எடுத்துச் சென்று தனது வேண்டுதல் பற்றி கூறியுள்ளார். அவர் வேண்டியபடியே நேர்த்திக் கடனை நிறைவேற்றலாம் என்று முதல்வர் உத்தரவிட்டதாக நீலகண்டன் தெரிவித்தார்.

அதன்படி, தனது எம்.எல்.ஏ. சம்பளத்துடன், மேலும் கொஞ்சம் பணத்தைச் சேர்த்து சென்னையில் உள்ள பிரபல ஜூவல்லரியில் 68 கிலோ வெள்ளியில் காளஹஸ்தி சிவனுக்கு கவசம் செய்ய ஆர்டர் கொடுத்தார். கவசம் தயாராவதற்குள் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் தேர்தல் முடிந்ததும், 68 கிலோ கவசத்தை வாங்கி, முதல்வரிடம் காண்பித்து அதனை முதல்வர் தொட்டுக் கொடுத்ததும், எடுத்துச் சென்று காளஹஸ்தி சிவனுக்கு கவசத்தை சாற்றவிருப்பதாகக் கூறுகிறார் நீலகண்டன்.

தற்போதைய எம்.எல்.ஏ.வான நீலகண்டன், ஆந்திர மாநிலம் காணிப்பாக்கத்திலும், தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே தொரூரிலும் கிரானைட் தொழில் செய்து வருகிறார். இத்தேர்தலில் சென்னை திரு.வி.க.நகர் (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்புக்கோரி 32 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், நீலகண்டனுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x