Published : 08 Apr 2022 04:58 PM
Last Updated : 08 Apr 2022 04:58 PM

கடன் தொகை உயர்வு, புதிய ஆப் அறிமுகம் | கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை - 20 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்துதல், கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதற்கு செயலி உருவாக்குதல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கூட்டுறவுத் துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கொள்கை, கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை 20 லட்சமாக உயர்த்துதல், மன்னார்குடியில் வேப்ப விதைத்தூள் மற்றும் வேப்பம்பிண்ணாக்கு உற்பத்தி அலகு அமைத்தல், கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதற்கு செயலி உருவாக்குதல், திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் நுண்ணூட்டச்சத்து கலப்பு உர அலகு அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார். அவர் வெளியிட்ட 20 முக்கிய அறிவிப்புகள்:

> தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கிச் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

> சென்னை அண்ணாநகரில், பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும்.

> கூட்டுறவுத் துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கொள்கை உருவாக்கப்படும்.

> கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை, ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.

> திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமாக உள்ள விதை நெல் உற்பத்தி நிலையம் புதுப்பிக்கப்படும்.

> திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமான பாமணி உர ஆலையில் புதியதாக வேப்ப விதைத்தூள் மற்றும் வேப்பம்பிண்ணாக்கு உற்பத்தி அலகு நிறுவப்படும்.

> திண்டுக்கல் மாவட்டம் எரியோடில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமான இடத்தில், உயிரி உரம் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி அலகு அமைக்கப்படும்.

> திண்டுக்கல் மாவட்டம் எரியோடில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமான இடத்தில் நுண்ணூட்டச்சத்து கலப்பு உர அலகு அமைக்கப்படும்.

> மாநில அளவிலான பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் இணையம் அமைக்கப்படும்.

> கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதற்கு ஒரு பொதுவான கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும்.

> திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு புதிய தலைமை அலுவலகம் கட்டப்படும்.

> தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

> கோவை மாவட்டம், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா சங்கத்திற்கு கூடுதலாக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

> கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளுக்கு கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

> மதுரை, வேலூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்.

> செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டத்திலுள்ள இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நவீனமயமாக்கப்படும்.

> கடலூர் மற்றும் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

> இருபத்திரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

> தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு நான்கு புதிய கிளைகள் துவக்கப்படும்.

> திருச்சிராப்பள்ளி மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x