Published : 08 Apr 2022 04:20 PM
Last Updated : 08 Apr 2022 04:20 PM

'அமித் ஷா உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானது' - கே.எஸ்.அழகிரி

கேஎஸ் அழகிரி | கோப்புப் படம்

சென்னை: நாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடந்த எட்டு ஆண்டுகளாக பாஜக-வினர் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தல் அரசியலில் ஆதாயம் தேடி வருகிற போக்கு நிலவி வருகிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் விரோதமானது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் கருத்தியல். அந்த கருத்தியலை சீர்குலைக்கிற வகையில் பாஜக-வினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய மக்களை மொழிரீதியாக பிளவபுடுத்துகிற வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

நாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா: 'ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை இந்தி மொழி அடிப்படையில் தான் ஏற்படுத்த முடியும். மத்திய அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல்கள் இந்தியில் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன' என்று பேசியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டுமென்று கருத்து உருவான போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆட்சி மொழி குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், அரசமைப்புச் சட்டம் 343(3)-ன்படி ஆட்சி மொழிகள் சட்டம் மே, 1963-ல் நிறைவேற்றப்பட்டது. அந்த விவாதத்தில் பங்கேற்று 24.4.1963 அன்று பிரதமராக இருந்த நேரு உரையாற்றும் போது, 'எல்லா 14 மொழிகளும் தேசிய மொழிகள் என நமது அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அதை உருவாக்கியவர்கள் விவேகம் உடையவர்கள் என்பதை காட்டுகிறது.

ஒரு மொழி மற்றொரு மொழியை விட தேசியமானது என்ற பேச்சுக்கே இடமில்லை. வங்காளியோ, தமிழோ அல்லது வேறு எந்த பிராந்திய மொழியோ இந்தி மொழியைப் போன்ற தேசிய மொழிகளாகும்' என்று அனைத்து மொழிகளையும் சமமாக கருதி தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்தியாவின் ஆட்சி மொழி எது என்ற சர்ச்சைக்கு முடிவுகட்டுகிற வகையில் இந்தி பேசாத மக்களுக்கு நேரு உறுதிமொழியை வழங்கினார். அதன்படி, 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாக
தொடர்ந்து நீடிக்கும். இது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது குறித்து முடிவெடுக்கிற உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடாமல், இந்தி பேசாத மக்களிடமே விடுவேன்' என்று மக்களவையில் உறுதிமொழி வழங்கினார். இந்த உறுதி;மொழி தான் இந்தி பேசாத மக்களுக்கு
இந்தி திணிப்பிலிருந்து என்றைக்கும் பாதுகாக்கிற கவசமாக விளங்கி வருகிறது.

மேலும், நேருவின் உறுதிமொழிக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கிற வகையில் ஆட்சி மொழிகள் திருத்த சட்டம் 1967-ல் நிறைவேற்றப்பட்டது. அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, 16.12.1967 இல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தப்பட்ட சட்டம் மத்திய-மாநில
அரசுகளுக்கிடையே தகவல் தொடர்பு எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியது. இந்தி பேசாத மாநிலங்களுக்கு மத்திய அரசிலிருந்து எழுதப்படுகிற கடிதங்கள் ஆங்கிலத்தில் தான் கட்டாயம் இருக்க வேண்டுமென்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம்
இந்தி திணிப்பு தடுக்கப்பட்டது.

ஆனால், பாஜக இந்தியை திணிப்பதில் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நேரு, இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த போது, தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் நடைபெறுகிற கூட்டங்களில் பேசும் போது, ஆங்கிலத்தில் மட்டும் பேசுகிற நடைமுறையை கொண்டிருந்தார்கள். ஆனால், பிரதமர் மோடி இந்தி மொழியில் பேசுகிற நடைமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இதன்மூலம் இந்தி பேசாத மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற போக்கை பிரதமர் மோடி கடைபிடிப்பதை போல, தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தியை திணிப்பதில் தீவிரம் காட்டுகிறார்.

மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பாஜக-வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற செயலாகும்.

எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆற்றிய உரை என்பது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். அமித்ஷா கூற்றின்படி ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி திணிக்கப்படுமேயானால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு பாஜக-வின் இந்தி திணிப்பிற்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x