Published : 08 Apr 2022 01:24 PM
Last Updated : 08 Apr 2022 01:24 PM
சென்னை: "சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் பழைய சொத்து வரியே செலுத்தலாம்" என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
சொத்து வரி அதிகரித்தால் வீட்டு வாடகை உயரும் என்ற பயம் மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்று சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சொத்து வரி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘‘உயர்த்தப்பட்ட சொத்து வரியானது முதல் அரையாண்டில் அமல்படுத்தப்படாது. 2022 - 2023 நிதியாண்டில் முதல் அரையாண்டுக்கு பழைய சொத்து வரியே பொதுமக்கள் செலுத்தலாம். கூடுதலாக எந்தத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சொத்து வரி மறு சீரமைப்பு செய்து 2-வது அரையாண்டில் புதிய சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால், அவர்கள் செலுத்திய தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT