Published : 01 Apr 2016 08:03 AM
Last Updated : 01 Apr 2016 08:03 AM
திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலை ஓரத்தில் ரூ.1.60 கோடி செலவில் அமைக்கப்படும் பசுமைப் பாதைகளின் நடுவில் மின் கம்பங்கள் இருப்பதால், அந்த திட்டத்தின் நோக்கம் சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் 3 இடங்களில் பசுமையுடன் கூடிய நடைபாதை, சைக்கிள் பாதை (ட்ராக்) அமைக்க ரூ.3.85 கோடியை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்த நிதியில் இருந்து தென்னூர் அண்ணா நகர் இணைப்புச் சாலையோரத்தில் உள்ள உய்யக்கொண்டான் கால்வாய்க் கரையில் ரூ.85 லட்சம் செலவிலும், அண்ணா விளையாட்டரங்கத்தைச் சுற்றிச் செல்லும் ரேஸ்கோர்ஸ் சாலையோரத்தில் ரூ.1.60 கோடி செலவிலும், ரங்கம் ரங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள உத்திர வீதிகளில் ரூ.1.40 கோடியிலும் பசுமைப் பாதைகளை ஏற்படுத்தும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பேவர் பிளாக் கற்களைப் பதித்து உருவாக்கப்படும் இந்த இரு பாதைகளின் இடையே அலங்கார விளக்குகள், மரங்கள், மலர்ச் செடிகள் வைத்து பராமரிக்கப்பட உள்ளது. நடைப் பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வோர் ஓய்வெடுப்பதற்காக 15 மீட்டருக்கு ஒரு இடத்தில், கிரானைட் கற்களாலான இருக்கை வசதி செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில பசுமைப் பாதைகளுக்கு இடையே, மின் கம்பங்கள் காணப்படுகின்றன. இவற்றை அகற்றி சாலையோரத் தில் வைத்துவிட்டு, அதன் பின் நடைபாதைகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் நடைபாதைகளை அமைத்துள்ள னர். இதனால், மின் கம்பங்கள் உள்ள சில இடங்களில் நடை பாதைகள் வளைவுகளுடனும், முறையான வடிவமின்றியும் காணப்படுகின்றன.
மேலும், நடைபாதைகளின் மையப் பகுதியில் மின் கம்பங்கள் அமைந்திருப்பதால், அவற்றின் வழியே சைக்கிள் ஓட்டிச் சென்று பயிற்சி மேற்கொள்ள வழியே இல்லை. நடைப் பயிற்சி மேற்கொள்வோர் இரவு நேரங்களில் கம்பங்களில் மோதிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என்பதால் இப்பாதைகளில் நடைப் பயிற்சியோ, சைக்கிள் பயிற்சியோ மேற்கொள்ள மக்கள் முன் வருவார்களா என்பது சந்தேகமே.
இதை உணர்ந்து பசுமைப் பாதைகளின் நடுவில் உள்ள மின் கம்பங்களையும், மின்மாற்றியை யும் உடனடியாக ஓரத்தில் மாற்றி யமைக்கவும், புதுமை முயற்சிகள் திட்டத்தை, அதன்நோக்கம் சிதை யாமல் நிறைவேற்றவும் மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் என்.எஸ்.பிரேமாவிடம் கேட்டபோது, நடைபாதைகளின் நடுவில் உயரழுத்த மின்சாரம் செல்லும் கம்பங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மின் வாரியத்துக்கு தெரியப்படுத்தி, உரிய கட்டணத்தைச் செலுத்தி கம்பங்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பசுமைப் பாதைகள் பணிகள் முடிவுற்று, பயன்பாட்டுக்கு வரும்போது நிச்சயம் இந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டிருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT