Published : 08 Apr 2022 12:09 AM
Last Updated : 08 Apr 2022 12:09 AM
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் எப்போது வீட்டிற்கு அனுப்ப படுவார் என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராணசாமி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், எரிவாயு, மருந்துகள் மற்றும் மின்வரி ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை மாலை பிரச்சார பேரணி (ஏப். 7) நடைபெற்றது.
இப்பேரணிக்கு மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பேரணியை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அண்ணா சிலை அருகில் தொடங்கிய பேரணி நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று மாதா கோயில் அருகில் நிறைவு பெற்றது.
பேரணியின் முடிவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நரேந்திர மோடி அரசு மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒருபுறம் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். மற்றொருபுறம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், இரும்பு, சிமெண்ட் போன்ற பொருள்களின் விலைகளும் உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மோடி அரசு நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கேட்டால் புறக்கணிக்கிறார்கள். எப்படி மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லையோ, அதே போல புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆட்சி அலங்கோலமாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நரேந்திர மோடி புதுச்சேரிக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்.
இன்று மக்கள் அவதிபடுகின்ற நிலையே ஏற்பட்டிருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவுக்கு குடுமிப்பிடி சண்டை தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. ரங்கசாமியை தூக்கி எறிந்து விட்டு தங்கள் ஆட்சியை அமைக்க பாஜக முயற்சி செய்கிறது. ரங்கசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் ரங்கசாமி மீது பாஜக எம்எல்ஏக்கள் புகார் எழுப்பியுள்ளனர். இப்போது அவசர அவசரமாக துணைநிலை ஆளுநர் டெல்லிக்கு அழைக்கப்பட்டு, பிரமதர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்திக்கிறார். பாஜகவைச் சேர்ந்தவர்கள் துணைநிலை ஆளுநரை மாற்ற வேண்டுமென போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
அதற்கான முன்னணியாகத் தான் துணைநிலை ஆளுநர் டெல்லிக்கு அழைக்கப்பட்டார் என செய்திகள் வருகின்றன. ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்புவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. 5 ஆண்டு காலம் எங்களுக்கு தொல்லை கொடுத்த பாஜக, ஓராண்டு காலம் ரங்கசாமியை நிம்மதியாக தூங்கவிடவில்லை. முதல்வரின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்த நேரத்தில் ரங்கசாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பது இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்தோம். அதனை கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். டெல்லியில் அதற்கான கோப்புகள் இருக்கிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்தியாவின் கடன் சுமை அதிகமாக இருக்கிறது. வருவாய் இல்லை. நரேந்திர மோடி ஆட்சி வந்தபிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீமாக குறைந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் இந்திய நாட்டுக்கும் பொருளாதார நெருக்கடி வருவதற்கான வாய்ப்புகள் அளதிளவில் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT