Published : 07 Apr 2022 05:45 PM
Last Updated : 07 Apr 2022 05:45 PM

ரூ.3,000 கோடிக்கு புதிய திட்டங்கள்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 3 அம்சங்களுக்கு முக்கியத்துவம் தர வாய்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பட்ஜெட் தாக்கலாகிறது. மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நாளை மறுநாள் (ஏப்.9) சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள மன்ற கூடத்தில் 2022 - 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இதில் ரூ.3,000 கோடி அளவுக்கு புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மழைநீர் வடிகால், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஒவ்வொரு மழையின்போது சென்னையில் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் முழ்கி விடுகின்றன. இதைத் தடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னையில் அதிக அளவு நீர் தேங்கிய 20 இடங்களில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த பருவ மழைக்குள் சென்னையில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி, இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1000 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை நீர் வடிகால் துறைக்கு அடுத்தபடியாக மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த சிட்டிஸ் (CITIS) திட்டத்தின் கீழ் ரூ.92 கோடி செலவில் 28 பள்ளிகளை மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டவையாக பள்ளி வளாகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைப்போன்று சென்னையில் அனைத்துப் பள்ளிகளையும் மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.

மூன்றாவதாக சுகதாரத் துறைக்கு முக்கியதுவம் அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பகுதியில் தற்போது 80 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்க 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14 நகர்புற சமூக நல மையங்கள், 5 மகப்பேறு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.

2011 மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில்தான் இந்த சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையில் சுகாதார வசதிகளை மேம்படுத்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் சென்னை மாநகராட்சி பொது சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x