Published : 07 Apr 2022 03:24 PM
Last Updated : 07 Apr 2022 03:24 PM
ஓசூர்: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஓசூர் நகரில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உதவி ஆணையர் பாலகுரு மற்றும் டிஎஸ்பி சிவலிங்கம் முன்னிலையில் கோட்டாட்சியர் தேன்மொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் மாணவர் குழுவினர் பேண்டு வாத்தியம் இசைத்தபடி முன்செல்ல அதைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூதாயத்தை சீரழிக்கும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தியபடியும், விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடியும் ஊர்வலமாக சென்றனர்.
மேலும், பேரணி சென்ற வழி எங்கும் கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பேரணி ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் தொடங்கி நேதாஜி சாலை, ராமர் தெரு, ஏரித்தெரு உள்ளிட்ட நகரின் பிரதான வீதிகளின் வழியாக பயணித்து இறுதியில் உதவி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது.
இதில் நகர காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், பிஎம்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT