Published : 04 Apr 2016 01:34 PM
Last Updated : 04 Apr 2016 01:34 PM
பாளையங்கோட்டை தொகுதியைக் கைப்பற்ற தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணையும் முன்னரே, திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய 3 தொகுதிகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று, மாநில தலைமையிடம் மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே இத்தொகுதிகளில் பெற்ற வாக்குகள், செல்வாக்கு, தொழிலாளர் வாக்குகள் போன்ற பல்வேறு அம்சங்களையும் கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
கடும் போட்டி
அதேநேரத்தில் பாளையங்கோட்டை தொகுதியில் நிச்சயம் மதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துவந்தனர். மதிமுக சார்பில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் நிஜாம் போட்டியிடுவார் என்று அவர்கள் அறுதியிட்டுக் கூறினர். இந்நிலையில் தற்போது மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதால், இத்தொகுதியைப் பெறுவதில் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
மார்கசிஸ்ட் வேட்பாளர்
இத்தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட டி.பி.எம்.மைதீன்கான் 58,049 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு அடுத்ததாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.பழனி 57,444 வாக்குகளை பெற்று 605 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். இதனால் இத்தொகுதியைப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயன்று வருகிறது. அக்கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டால், வேட்பாளராக திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
சிறுபான்மையினர் வாக்குகள்
அதேநேரத்தில் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் மதிமுகவுக்கு இத்தொகுதியை ஒதுக்கி நிஜாம் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்துகிறார்கள். பாளையங்கோட்டை தொகுதியில் மேலப்பாளையத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ளதால் நிஜாமுக்கு ஆதரவு கிடைக்கும் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கை.
தேமுதிகவும் முயற்சி
இந்நிலையில்தான் இத் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று தற்போது அக்கட்சியினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். தேமுதிகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டால் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் முகம்மது அலி போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முகம்மது அலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வெற்றி உறுதி என்று தேமுதிகவினர் நம்புகிறார்கள்.
இவ்வாறு 3 கட்சிகளும் பாளையங்கோட்டை தொகுதிக்கு குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றன. வெற்றிவாய்ப்புக்கான சாதகங்கள் குறித்தெல்லாம் தங்கள் கட்சித் தலைமைக்கு இக்கட்சியினர் தெரிவித்திருக்கிறார்கள். இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும், யார் வேட்பாளர் என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT