Published : 06 Apr 2022 06:54 PM
Last Updated : 06 Apr 2022 06:54 PM

தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதாக வழக்கு: அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

கோப்புப் படம்

சென்னை: தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி முறைகேடில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயக்கோபி தாக்கல் செய்துள்ள மனுவில், 'குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளது. இ-டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருந்ததோடு, இறந்தபோன பூச்சிகளும் தொகுப்பில் கிடந்தன. இதுபோன்ற தரமற்ற பொருட்கள் விநியோகிப்பதால் மக்கள் பணம் வீணாடிக்கப்பட்டுள்ளது. எனது இந்தக் குற்றச்சாட்டு புகார், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தரமற்ற பொருட்கள் விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற பொருட்களை விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து லோக் ஆயுக்தா அமைப்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x