Published : 06 Apr 2022 05:45 PM
Last Updated : 06 Apr 2022 05:45 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர் நிலைகளைத் தூர்வாருதல், வெள்ள பாதிப்புகளைத் தடுக்க நிரந்தர திட்டங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் அறிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:
> சென்னை மாநகரில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், அடையாறு மற்றும் கொசஸ்தலையாறு உப வடிநிலங்களில், போரூர், புழல், செம்பரம்பாக்கம், வெள்ளிவாயல், மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க 8 வெள்ளத் தணிப்புப் பணிகள் முதற்கட்டமாக, ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> சென்னை மாநகரில், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில், கோவளம் உபவடிநிலத்தில், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம். தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க, 4 வெள்ளத் தணிப்புப் பணிகள் இரண்டாம் கட்டமாக, ரூபாய் 184 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> திருச்சி மண்டலத்தில் காவிரி முறைப்பாசனப் பகுதிகளில் பருவ மழைக்கு முன்பாக செயலாக்கப்பட்டு வரும் சிறப்புத் தூர்வாரும் பணிகள் போல, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டலங்களில் உள்ள ஆற்று அமைப்புகளில் சிறப்புத் தூர்வாரும் பணிகள் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> சிவகங்கை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 50 குறு பாசனக் கண்மாய்களை தரப்படுத்துதல் மற்றும் புனரமைக்கும் பணிகள் ரூபாய் 33 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> பத்து மாவட்டங்களில், 200 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தில் "செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு” (PMKSY-RRR) தலைப்பில் பணிகள் ரூபாய் 200 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.
> கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு, மற்றும் பரம்பிக்குளம் - ஆழியார். வடிநில பாசனக் கட்டமைப்புகளை, ஒருங்கிணைந்த முறையில் மறுசீரமைப்பு செய்ய வெளிப்புற நிதி உதவி பெற ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூபாய் 31கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> செயற்கை நுண்ணறிவு மற்றும் துணைக்கோள் உதவியுடன் சென்னை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கரமிப்புகளை கண்காணிக்கவும் மற்றும் நீரின் தன்மையை ஆராயவும் முன்னோடித் திட்டமாக ஒரு செயலி உருவாக்கும் பணி ரூபாய் 5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> சென்னை மாநகரத்திற்கு கூடுதல் நீர் வழங்குதல், வெள்ளத்தணிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முன்னோடித் திட்டத்திற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி ரூபாய் 5 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> டென்மார்க் நாட்டின் நவீன தொழில்நுட்பமான T-TEM பயன்படுத்தி நிலத்தடி நீர் இருப்பை கண்டறியவும், விவரணை (Mapping) தயாரிக்கவும் சோதனை அடிப்படையிலான ஒரு திட்டம் முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும்.
> நீரின் தரத்தை நீர் நிலைகளிலேயே கண்காணிக்க ஏதுவாக, 400 நீர்த் தன்மை ஆய்வு உபகரணத் தொகுப்புகள், ரூபாய் 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
> தேனி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பாசனக் கட்டுமானங்களின் பராமரிப்பை மேம்படுத்தும் வகையில், தென்னை நார்ப் பாய் மற்றும் புவி செயற்கை இழை போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி, 2 முன்னோடித் திட்டப்பணிகள் ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> கோயம்புத்தூர் மாநகராட்சியில் உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கிடைக்கும் தூய்மைப்படுத்தப்பட்ட நீரைக் கொண்டு அருகிலுள்ள சூலூர், மதுக்கரை போன்ற கிராமங்களுக்கு பாசன வசதி செய்யும் திட்டத்திற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பொருட்டு, ஆய்வுப் பணிகள், ரூபாய் 27 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், 3 இடங்களில், சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் அமைக்கும் பணி ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நான்கு புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்க முன்னோடிப் பணிகளான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் ரூபாய் 9 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கஸ்தூரிரெங்கபுரம் (பகுதி - || ) கிராமத்தில் புதிய குளம் அமைக்கும் பணி ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> (அ) திருநெல்வேலி மாவட்டத்திலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் தலா ஒரு புதிய வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி ரூபாய் 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலும்,
(ஆ) கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் ஏரி கிழக்குப்பிரதானக் கால்வாயிலிருந்து புதிய வழங்கு கால்வாய் வெட்டி போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள 33 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டப் பணி ரூபாய் 84 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
> திருநெல்வேலி மாவட்டத்தில் 2 இடங்கள் கடல்நீர் உட்புகுதலைத் தடுக்கும் பொருட்டு கடைமடை கட்டமைப்புகள் உருவாக்கும் பணி ரூ.35 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், நான்கு இடங்களில், ஆற்றின் இயல்பான படுகை மட்டத்தினை நிலைநிறுத்தும் பொருட்டு படுகை அணைகள் அமைக்கும் பணி ரூபாய் 27 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி , மாவட்டங்களில், ஐந்து இடங்களில், அணைக்கட்டுகள் அமைக்கும் பணி 84 கோடியே 30 லட்சம் ம. மேற்கொள்ளப்படும்.
> தென்காசி, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 3 புதிய நீரொழுங்கிகள் அமைக்கும் பணி ரூபாய் 15 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில், 3 இடங்களில், நிலத்தடி நீர்ச்செறிவினை அதிகரிக்கும் பொருட்டு, தரை கீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூபாய் 88 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> 8 மாவட்டங்களில், 15 இடங்களில், கட்டுமானங்களை புனரமைக்கும் பணிகள் 251 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> தூத்துக்குடி மாவட்டத்தில், வெள்ள இடர்பாடுகளைக் களையும் வண்ணம் மருதூர் மேலக்கால் மற்றும் கடம்பாகுளம் உபரி நீர் போக்கி, வழிந்தோடி கால்வாய் ஆகியவற்றில் சீரமைப்புப் பணிகள் ரூபாய் 37 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> 8 மாவட்டங்களில், 10 இடங்களில், தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் . 70 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு மற்றும் விளவங்கோடு வட்டங்களில், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT