Published : 06 Apr 2022 05:16 PM
Last Updated : 06 Apr 2022 05:16 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள பத்து மாவட்டங்களில், 200 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தில் "செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு” (PMKSY-RRR) பணிகள் ரூபாய் 200 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள பத்து மாவட்டங்களில், 200 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தில் "செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு” (PMKSY-RRR) பணிகள் ரூபாய் 200 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
அதன் விவரம்:
> மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு, பிரதமமந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், 2022-2023 ஆண்டில், எட்டாம் கட்டமாக (Phase VIII), கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை , திருவள்ளூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் 100 ஏரிகள் ரூபாய் 85 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும்,
> திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், கருவலூர் கிராமத்தில் உள்ள ஏரியினைப் புனரமைக்கும் பணி ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டிலும்,
> திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், கானூர் கிராமத்தில் உள்ள ஏரியினைப் புனரமைக்கும் பணி ரூபாய் 1 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலும்,
> திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், நடுவச்சேரி கிராமத்தில் உள்ள ஏரியினைப் புனரமைக்கும் பணி ரூபாய் 1 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்.
> ஒன்பதாம் கட்டமாக, (Phase IX), தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் 100 ஏரிகளில் ரூபாய் 114 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டிலும் செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT