Published : 06 Apr 2022 03:18 PM
Last Updated : 06 Apr 2022 03:18 PM

தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரியில் ’ஹில் காப்’ ரோந்து வாகனங்கள்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் நீலகிரியில் ஹில் காப் ரோந்து வாகனம் அறிமுக நிகழ்ச்சி

நீலகிரி: தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் ’ஹில் காப்’ ரோந்து வாகன சேவையை காவல்துறையினர் தொடங்கி வைத்துள்ளனர்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மாவட்டமாகும். ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 31 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 14-ம் தேதி முதல் கோடை சீசன் தொடங்கவுள்ளது. ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் சுமார் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருவது வழக்கம்.

அவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களின் பிரச்சினைக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சுற்றுலா பயணிகளின் உதவிக்காக பிரத்யேக இரு சக்கர ரோந்து வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பில் புதிதாக "ஹில் காப்" என்ற பெயரில் 4 இரு சக்கர வாகன ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சேவையை மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி ஆகியோர் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் முன்னிலையில் தொடங்கி வைத்தனர். ரோந்து வாகனம் தொடர்பாக மேற்கு மண்டல சுதாகர் கூறும்போது, "தமிழகத்தில் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் ஹில் காப் என்ற இரு சக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 3 இருசக்கர வாகனம் ஆண் காவலர்களும், 1 இருசக்கர வாகனம் பெண் காவலர்களும் ரோந்து பணியில் ஈடுபட ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு சீருடையில் அணியும் கேமரா, வாக்கி டாக்கி மற்றும் ஒளிரும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் உதகை நகர் பகுதியில் கோடை விழாவின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை, உடனடியாக அந்த இடத்துக்கு சென்று சீர் செய்வதுடன் சுற்றுலா பயணிகளுக்கு உதவியாக இருப்பர்.

மேலும் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சீருடையில் உள்ள கேமரா மூலம் காவலர்கள் சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது தெரிய வரும். கோடை சீசன் காலத்தில் உதகை - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்" என்று சுதாகர் கூறினார்.

இதனிடையே, நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் ஹில்காப் கேப் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x