Published : 06 Apr 2022 01:08 PM
Last Updated : 06 Apr 2022 01:08 PM

சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக வெளிநடப்பு: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில், அதுவும் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து விட்டு, தேர்தல் முடிந்தவுடன் வாக்களித்த மக்களுக்கு பரிசாக சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவை எதிர்gகட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முன்னதாக,”உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதனை ஏற்க மறுத்து,சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதன்பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்," நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 600 சதுரஅடிக்கு 25 சதவீதம் தொடங்கி 150 சதவீதம் என்று மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் கடுமையாக சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

அதிமுக சார்பில் இந்த பிரச்சினையை சட்டப்பேரவையில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தோம். கடந்த 2 ஆண்டுகாலமாக மக்கள் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையிழந்து, வருமானம் இல்லாம், வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிற சூழலில், இந்த சொத்து வரி உயர்வு கடுமையாக மக்களை பாதிக்கிறது. மக்கள் மீது, இந்த அரசு பெரும் சுமையை சுமத்துகிறது. மக்கள் பெரும் அதிர்ச்சியில், உறைந்து போயிருக்கின்றனர். எனவே இந்த அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என்பதை அமைச்சரின் கவனதுக்குக் கொண்டு வந்தோம்.

அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு கூறியதன் அடிப்படையில் சொத்து வரியை உயர்த்தியதாக கூறியிருக்கிறார். மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில், அதுவும் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடியும் வகை காத்திருந்து விட்டு, தேர்தல் முடிந்தவுடன் வாக்களித்த மக்களுக்கு பரிசாக சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த சொத்து வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வாடகை கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில், அறிவிப்பு எண் 487-ல், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மேம்படும் வரையில் சொத்துவரி உயர்த்தப்படமாட்டாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், இன்று அவர் தலைமையிலான அரசு சொத்துவரியை உயர்த்தியிருப்பது கண்டித்தக்கத்து.

மேலும், சொத்துவரி உயர்வை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நியாயப்படுத்திப் பேசுகிறார். அவர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது ஒரு பேச்சு, முதல்வரான பின்னர் ஒரு பேச்சு என்கிற வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x