Published : 06 Apr 2022 11:20 AM
Last Updated : 06 Apr 2022 11:20 AM
சென்னை: கடந்த ஆண்டுக்கும், இந்த ஆண்டுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன்
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு: பின்னர், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், மூதாதையர் காலத்தில் இருந்து வசித்து வரும் மக்களுக்கு தற்போது குடியிருப்பவர்களுக்கு நேரடியாக வாரிசு அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், மூதாதையர் காலத்தில் இருந்து வசிக்கும் நிறைய இடங்களுக்கு பட்டா மாறுதல் இல்லாமல் இருக்கிறது. அதனை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரிசுகளின் எண்ணிக்கைகளைக் கருத்தில் கொண்டு அது சரிசெய்யப்பட நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் கடந்த ஆண்டும், இந்த ஆண்டுக்கும் சேர்த்து 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு தரப்பில் பட்டா வழங்கப்படும்போது சர்வே செய்து கொடுப்பது இல்லை. நிகழ்ச்சிகளில் பட்டா என்ற பெயரில் ஒரு பேப்பரை கையில் கொடுத்துவிடுவோம். அந்த இடத்தை பயனாளிகளுக்கு காட்டுவதுமில்லை. இந்தமுறை அதுபோல இல்லாமல், பயனாளிகளுக்கு இடத்தைக் காட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நத்தம் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு பட்டா: சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன், கிராமப்புரங்களில் நத்தம் புறம்போக்கு பகுதிகளில் நீண்டகாலமாக வீடுகட்டி வசிப்பவர்கள், மின் இணைப்பையு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பட்டா வழங்க கோரி மனு அளிக்கின்றனர். ஆனால், தாசில்தார்கள் ஏதாவது காரணத்தை கூறி பட்டா வழங்க மறுக்கின்றனர். எனவே வீடுகட்டி 30 ஆண்டு காலம், 50 ஆண்டு காலம் வசிப்பவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும் எனக் கோரினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன், நத்தம் புறம்போக்கில் வீடி கட்டி குடியிருப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. உடனடியாக பட்டா வழங்கச் சொல்கிறோம் என்றார்.
முத்துப்பேட்டை தனி தாலுகா: அப்போது திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை தனி தாலுகாவாக அறிவிக்கவும், அதனை செயல்படுத்த வேண்டும் என்று தொகுதி மக்களின் சார்பில் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடனேயே முத்துப்பேட்டை தனி தாலுகாவாக செயல்படத் தொடங்கும் என பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT