Published : 06 Apr 2022 04:23 AM
Last Updated : 06 Apr 2022 04:23 AM

தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணம் உயராது - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை

தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். மின்சார வாகனம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் சில பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் சோதனை முறையில் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளிலும் பயணிகளின் முகங்களை அறியும் வகையில்நவீன தொழில்நுட்பத்துடன் கூடியகேமராக்கள் பொருத்தப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், சட்டப்பேரவைகூட்டத்துக்குப் பிறகு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். புதியபேருந்துகள் வாங்க ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் பேசிவருகிறோம். அதில் உடன்பாடுஎட்டப்பட்டதும் புதிய பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை.

தமிழகத்தில் மின்சார இருசக்கர வாகனங்களில் ஏற்படும் திடீர் தீ விபத்துகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது.

பேருந்து பயணம், பயணத்தில் ஏற்படும் இடர்கள் உள்ளிட்டவற்றை புகாராக தெரிவிக்க போக்குவரத்து துறைக்கென தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பேருந்துகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பட்டன்கள் ஆகிய அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் நவீன தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x