Published : 06 Apr 2022 07:55 AM
Last Updated : 06 Apr 2022 07:55 AM
தாம்பரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களை அறிமுகப்படுத்தினார். அம்மா உணவகங்களுக்கு ஏராளமான பொதுமக்கள், கூலித் தொழிலாளர்கள் வந்து வயிறார சாப்பிட்டுச் சென்றனர்.
தற்போது திமுக ஆட்சியிலும், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 7 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த உணவகங்களில் தயார் செய்யப்படும் உணவு, தரம் குறைவாகவும், சுவை இல்லாமலும் போதிய சுகாதாரம் இன்றியும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அம்மா உணவகத்தில், இட்லி கல் மாதிரியும், சாம்பார் தண்ணீராகவும் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தயிர் சாதத்தில் நெல் அதிகமாக இருப்பதாகவும், பழைய சாதம் போல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
பம்மல் அண்ணா சாலையில் உள்ள உணவகத்தில் கூலி வேலை செய்பவர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். ஆனால், பிற்பகல் 2 மணிக்குள் உணவு தீர்ந்து விடுகிறது. இதனால் கூலித் தொழிலாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஜெயலலிதா இருக்கும் போது அம்மா உணவகம் தரமாக இருந்தது. அதன் பின் வந்த அதிமுக அரசு சரியாகக் கவனிக்கவில்லை. தற்போது திமுக ஆட்சியில் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அம்மா உணவகத்தில் சமையல் கூடம், உணவு அருந்தும் இடத்தின் பராமரிப்பு மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகத்தை முறையாகக் கவனிப்பதில்லை. எனவே, இவ்விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, தரமாகவும், சுவையாகவும் உணவுகளைத் தயார் செய்து, வழங்க வேண்டும் என பல்லாவரம் முன்னாள் துணைத் தலைவர் அதிமுகவைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கூறும்போது, "அம்மா உணவகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசிடம் கூடுதல் பணியாளர்களை நியமிக்கக் கோரிக்கை விடுத்துள்ளோம். உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களை ஆய்வு செய்து தரமாகவும், சுவையாகவும் உணவு தயார் செய்யவும் முறையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...