Published : 09 Apr 2016 03:32 PM
Last Updated : 09 Apr 2016 03:32 PM
ஓசூர் சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து 3-வது முறை ஒதுக்கப்பட்டுள்ளதால், திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டப்பேரவை தொகுதி 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபிநாத், கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
இதில், கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக கூட்டணியிலும், 2006, 2011-ல் நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு கோபிநாத் வெற்றி பெற்றார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே ஓசூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான கோபிநாத் போட்டியிடுவார் என தெரிகிறது.
இதனால், ஓசூர் தொகுதி கிடைக்கும் என காத்திருந்த திமுக நிர்வாகிகள் பலர் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, 15 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே ஓசூர் தொகுதி ஒதுக்கப்படுகிறது. ஒசூர் தொகுதியில் மக்கள் குறைகளை தீர்க்கக்கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சியினர் எவ்வித போராட்டங்களும் நடத்தாமல், ஒவ்வொரு முறையும் திமுக ஆதரவுடன் எளிதாக வெற்றி பெறுகிறது. இதனால் எங்களது உழைப்பு வீணாகிறது, என்றனர்.
அதிருப்தியால் ஓசூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக திமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் சுயேட்சையாக களம் இறங்க கூடும் என்கின்றனர் திமுகவினர். இதனால் வெற்றி வாய்ப்பும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, திமுக நிர்வாகிகள் பலர் நேற்று முதலே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். ஒருசிலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களையும் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள கோபிநாத் சமாதானப்படுத்தி மீண்டும் 4-வது முறையாக வெற்றி வாகை சூடுவார், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT