Published : 05 Apr 2022 05:00 PM
Last Updated : 05 Apr 2022 05:00 PM
சென்னை: ”இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: "நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாக கொண்டு, இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற தோற்றை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்கள் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம்பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புக்களை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதை பார்த்து வருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைபடங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
2015 பெருவெள்ளத்தின் போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிளை யாரும் மறந்துவிட முடியாது. கரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள் இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது.
உண்மை நிலை இப்படி இருக்கும்போது, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளிவந்தால், இஸ்லாமியர்களிடையே ஒரு சுணக்கமான சூழல் ஏற்படும். ஆகவே அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...