Published : 05 Apr 2022 04:40 PM
Last Updated : 05 Apr 2022 04:40 PM
விழுப்புரம்: பிரதமர் அலுவலகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த அமுதா ஐஏஎஸ், தமிழக உள்ளாட்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னணியை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, "என்னதான் இன்றைக்கு நான் முதல்வராக இருந்தாலும், ஏற்கெனவே நான் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலேயே உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவன்தான் நான். அப்போது எல்லோரும் சொல்வார்கள், உள்ளாட்சித் துறையில் நல்லாட்சி நடத்துகின்ற நாயகன் என்று சொல்வார்கள். இன்னும் கூட சொல்ல வேண்டுமென்றால், தலைவர் கருணாநிதி பல நிகழ்ச்சிகளில் அப்பொழுது கலந்து கொண்டபோது, எனக்கு உள்ளாட்சித் துறையைப் பார்த்தால், ஸ்டாலினை பார்த்தால் எனக்கு ஒரு பொறாமை வந்திருக்கிறது. எனவே, அந்தத் துறையை நானே வைத்திருந்தால் எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்குமே, இன்னும் அதிகமான பெயர் கிடைத்திருக்குமே என்று பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்.
ஆகவே அப்படிப்பட்ட, மக்களோடு மக்களாக, மக்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு துறை இந்த உள்ளாட்சித் துறை. அந்தத் துறையின் அமைச்சராக நான் ஏற்கனவே இருந்தவன் என்ற அந்தப் பெருமையோடு, அந்தப் பூரிப்போடு, புளங்காகித உணர்வோடு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சம் திமிரோடு, கொஞ்சம் ஆதங்கத்தோடு, அதிலே நான் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே, இந்தத் துறை மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய துறையாக அமைந்திருக்கிறது. ஆகவே இதில் சிறப்பாக பணியாற்ற வேண்டும், இந்தத் துறை மேலும், மேலும் வளர்ச்சியடைய வேண்டும், மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை உடனடியாக நிறைவேற்றித் தரக் கூடிய துறையாக இது அமைந்திட வேண்டும் என்று அந்தத் துறையினுடைய அமைச்சராக இருந்த போது நான் எண்ணியதுண்டு. இப்பொழுது முதல்வராக ஆனதற்குப் பிறகும் நான் எண்ணிக் கொண்டிருப்பது உண்மை.
அதனால்தான் இந்தத் துறையிலே யாரை அமைச்சராக நியமிக்கலாம் என்று யோசித்தபோது, நம்முடைய பெரியகருப்பன் என்னுடைய எண்ணத்திலே தோன்றினார். அதனால் அவரை இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று பணியாற்ற வேண்டுமென்று சொல்லி அந்தத் துறையை இன்றைக்கு அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு, இந்தத் துறையில் செயலாளராக இருக்கக் கூடிய அமுதா ஐ.ஏ.எஸ்., நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது, நான் முதல்வராகப் பொறுப்பேற்போது, அவர் தலைநகர் டெல்லியிலே, அதுவும் குறிப்பாக பிரதமர் அலுவலகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் டெல்லிக்குச் சென்றபோது அவரை சந்தித்துப் பேசினேன். நீங்கள் ஏற்கெனவே தருமபுரி மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்திருக்கிறீர்கள். பல்வேறு அரசுத் துறையிலே பொறுப்பிலிருந்து பணியாற்றி இருக்கிறீர்கள். உங்கள் பணிகளை பார்த்து நான் வியந்ததுண்டு. ஆகவே, ஏன் நீங்கள் டெல்லியில் இருக்கிறீர்கள், தமிழகத்தில் வந்துவிடலாமே, ஒரு முக்கியமான துறையை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது, நீங்கள் சொன்னால் அடுத்த வினாடியே வந்துவிடுகிறேன் என்று என்னிடத்திலே உறுதி தந்தார்.
அதனால்தான் நான் உடனடியாக டெல்லியில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளோடு, பிரதமர் அலுவலகத்தோடு எங்கள் அதிகாரிகள் மூலமாக தொடர்பு கொண்டு, இன்றைக்கு தமிழகத்திற்கு அவரை வரவழைத்து உள்ளாட்சித் துறையினுடைய, ஊரக வளர்ச்சித் துறையினுடைய செயலாளராக இன்றைக்கு அந்தப் பொறுப்பேற்று எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் அவர் பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறார். ஆகவே அவர்களுக்கு அமைச்சராக இருக்கும் பெரியகருப்பனுக்கு அந்தத் துறையில் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அமுதா, ஐ.ஏ.எஸ்க்கும் நான் இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT