Published : 05 Apr 2022 02:11 PM
Last Updated : 05 Apr 2022 02:11 PM
சென்னை: வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த வெளியிட்டுள்ள பதிவில், ''செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. டிகே இந்திராணி என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவுகின்றன; மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும்; வரதட்சணை தான் மகளிர் கல்வியை ஊக்குவிக்கிறது என்பன போன்ற அந்த நூலில் உள்ள கருத்துகள் பிற்போக்கானவை.
அசிங்கமான பெண்களை கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களை பண்டமாகப் பார்க்கும் இழி செயலாகும். இந்தக் கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு? எனத் தெரியவில்லை.
வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT