Published : 05 Apr 2022 01:41 PM
Last Updated : 05 Apr 2022 01:41 PM
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா இன்று (ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில், பங்குனி பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதில், கடந்த 30-ம் தேதி திருவிழாவுக்காக நாட்டுகால் நடும் விழா நடந்தது. இதைதொடர்ந்து, இன்று பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணி நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் ஆகிய பூஜைகள் நடந்தது. 5.30 மணிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமி பூவனநாத சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம்பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால், நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், கோவில்பட்டி கம்மவார் சங்க தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில், தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.13-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதப்பிறப்பான 14-ம் தேதி தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப திருவிழாவும் நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீஸார் செய்து வருகின்றனர்.
தேரோட்டத்தையொட்டி, தேர்களை சுத்தப்படுத்தி, பழுது நீக்கி பராமரிக்கும் பணி கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பின் பங்குனி பெருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மு.நாகராஜன் மற்றும் மண்டகப்படிதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT