Published : 05 Apr 2022 01:24 PM
Last Updated : 05 Apr 2022 01:24 PM

பெங்களூரு, கொச்சினை ஒப்பிடுகையில் தமிழக நகர்ப்புறங்களில் சொத்து வரி மிகவும் குறைவு: அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தின் நகர்புறத்தில் மொத்தமுள்ள 77 லட்சத்து 87 ஆயிரத்து 188 குடியிருப்புகள் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில், 44 லட்சத்து 53 ஆயிரத்து 976 குடியிருப்புகள், அதாவது 58.45 சதவீத குடியிருப்புகளுக்கு வெறும் 25 சதவீதம் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அகமதாபாத், நாக்பூர், லக்னோ,பெங்களூரு மற்றும் கொச்சின் போன்ற நகரங்களைக் காட்டிலும், தமிழகத்தில் மிகவும் குறைவாக சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சொத்து வரி உயர்வு குறித்து தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கடந்து 1989-ல் ரூ.23.94 காசுக்கு விற்ற பெட்ரோல், இன்று 107.43 காசுக்கு விற்கப்படுகிறது. 348.75 சதவீதம் உயர்ந்துள்ளது. நிலத்தின் வழிகாட்டு மதிப்பீடை எடுத்துக் கொண்டால், 1988-89 இல் அண்ணாநகரில் ஒரு சதுர அடி அரசின் வழிகாட்டு மதிப்பீடு என்பது 1393 ரூபாய், இன்று அதன் மதிப்பு அண்ணாநகரில் சதுர அடி 6253 ரூபாயாக உயர்ந்துள்ளது. தேனாம்பேட்டையில், 98-99 இல், 1,978-ஆக இருந்த வழிகாட்டு மதிப்பீடு, தற்போது 7,705-ஆக உயர்ந்துள்ளது.

அதே போல், 98-99 ஆம் ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது 289 சதவீதம் தேனாம்பேட்டையில் உயர்ந்துள்ளது. ஆலந்தூரில் 2008-09 இல் ஒரு சதுர அடி ரூ.1,833-ஆக இருந்த மதிப்பு, இன்று கிட்டத்தட்ட ரூ.3,685-ஆக உயர்ந்திருக்கிறது. திருவொற்றியூரில் ரூ.767-ஆக சதுரஅடி ரூ.1,965 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு முந்தைய சொத்து சீராய்வுகளின் போது கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாது, குடியிருப்பு கட்டடங்கள் பிரித்து, பரப்பளவு குறைவான கட்டடங்களுக்கு குறைவான சொத்துவரி உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தற்போது கட்டடங்கள் எவ்வளவு இருக்கு, காலியிடம் எவ்வளவு இருக்கு என்பதை பிரித்துதான் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புறத்தில் மொத்தமுள்ள 77 லட்சத்து 87 ஆயிரத்து 188 குடியிருப்புகளில் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில், 44 லட்சத்து 53 ஆயிரத்து 976 குடியிருப்புகள், அதாவது 58.45 சதவீத குடியிருப்புகளுக்கு வெறும் 25 சதவீதம் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல, 19 லட்சத்து 23 ஆயிரத்து 393 குடியிருப்புகளில் அதாவது 24.07 சதவீத குடியிருப்புகளுக்கு வெறும் 50 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்புகளைப் பொருத்தவரை பொருளாதார அடிப்படையில் பார்த்தால், 83.18 சதவீத மக்களுக்கு இந்த வரி உயர்வு என்பது பெரும் பாதிப்பாக இருக்காது. மொத்தமுள்ள 77 லட்சத்து 87 ஆயிரத்து 188 குடியிருப்புகளில் வெறும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 417 குடியிருப்புகளில் மட்டும் அதாவது 1.4 சதவீத குடியிருப்புகளுக்கு மட்டுமே அதிகபட்சமாக 150 சதவீத வரி உயர்வு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 11 லட்சத்து 3 ஆயிரத்து 210 குடியிருப்புகளில், 1 லட்சத்து 52 ஆயிரத்து 158 குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 3 லட்சத்து 46 ஆயிரத்து 832 குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், 3 லட்சத்து 12 ஆயிரத்து 894 குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநகரங்களில், அகமதாபாத், நாக்பூர், லக்னோ,பெங்களூரு மற்றும் கொச்சின் போன்ற நகரங்களைக் காட்டிலும், தமிழகத்தில் மிகவும் குறைவாக சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக் கட்டடத்துக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி ரூ.810 ஆகும். சீராய்வுக்குப் பின்னர், இது ரூ.1,215 ஆகும். ஆனால், இந்த தொகை மும்பையில் ரூ. 2,157 ஆகவும், பெங்களூரில் ரூ. 3,464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,510 ஆகவும், புணேவில் ரூ. 3,924-ஆகவும் உள்ளன.

கடந்த 1987- ஆட்சிக் காலத்தில் சொத்து வரியை 100 சதவீதம், 200 சதவீதம், 300 சதவீதம் என்று உயர்த்தியுள்ளனர். மீண்டும் 1993-ல் அதிமுக ஆட்சியில் உரிமையாளர் வசமுள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு 55 சதவீதமும், வாடகை கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு 150 சதவீதமும், வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 200 சதவீதமும் உயர்த்தியுள்ளனர். 87-ம் ஆண்டு 300 சதவீதம் உயர்த்திய அதிமுகவினர்தான், 25 சதவீதம் முதல் 150 வரை வரி உயர்த்தியுள்ள திமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். 2018-ம் ஆண்டு வரியை அதிமுகவினர் உயர்த்தினர். தேர்தல் வந்த காரணத்தால் அதை நிறுத்திவிட்டனர்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x